கேலோ இந்தியா விளையாட்டில் மல்லா் கம்பம் போட்டிகள் திருச்சியில் இன்று முதல் தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ஒடிஸா, குஜராத், ஜார்க்கண்ட், தெலங்கானா, ஆந்திரம், உத்தரகண்ட் உள்ளிட்ட 16 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன.
இன்று துவங்கிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இந்த விளையாட்டுக்காக திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில், தமிழக அணி ஆண்கள் பிரிவில் ஆர்.அமிர்தீஷ்வர், ஆா்.தியோதத், பாலாஜி, எஸ். விஷ்ணுபிரியன், பி.சுதேஜாஸ் ரெட்டி, கே.வி.ரோகித் சாய்ராம் ஆகிய 6 பேரும், மகளிர் பிரிவில் எஸ். சஞ்ஜனா, இ.பிரேமா, வி.மதிவதனி, வி.சங்கீதா, எம்.மேகனா, கே.பூமிகா ஆகிய 6 பேரும் களமிறங்குகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மல்லா் கம்பம் அணியின் பயிற்சியாளா் மல்லஞ்சி ஆதித்தன் தெரிவிக்கையில்; இதற்கு முன்னா் நடைபெற்ற கேலோ இந்தியா மல்லா் கம்ப விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி இரு பதக்கங்களை வென்றுள்ளது. தமிழ்நாடு அணியில் ஆடவர் பிரிவில் 6 பேரும், மகளிர் பிரிவில் 6 பேரும் பங்கேற்கின்றனர்.
கேலோ இந்தியா விளையாட்டில் இதற்கு முன்னர் தமிழ்நாடு சார்பில் 2021-ல் நடைபெற்ற போட்டியில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் வெண்கலப் பதக்கமும், 2022-ம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் விழுப்புரத்தைச் சேர்ந்த பவித்ரா வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.
இம்முறை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2024 சொந்த மண்ணில் நடைபெறுவதால் நம்பிக்கையுடன் களமிறங்குகின்றனர். தற்போது சிறந்த முறையில் வீரர், வீராங்கனைகள் தயாராகி உள்ளனர். சொந்தமண்ணில் தங்கப் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கின்றனர்.
மல்லர் கம்பம் விளையாட்டில் அணிகள் பிரிவு, தனிநபர் பிரிவு மற்றும் ஒட்டு மொத்த செயல்பாடு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நிலை மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய மூன்றிலும் வீரர், வீராங்கனைகளின் செயல் திறன் 10 புள்ளிகளுக்கு கணக்கிடப்படும்.
90 நிமிடங்களில் வீரர்கள் 16 வகையான திறன்களை வெளிப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில்தான் புள்ளிகள் வழங்கப்படும். மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்கள் கடும் சவால் அளிக்கக்கூடியவை. இருப்பினும் இம்முறை நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கின்றோம்” என தமிழ்நாடு மல்லர் கம்பம் அணியின் பயிற்சியாளர் மல்லஞ்சி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“