Khelo India Youth Games 2023 | Coimbatore: கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி கடந்த 21-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதற்கான இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தது. இப்போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் பஞ்சாப் அணியினர் முன்னிலை பெற்றனர். பின்னர் இரண்டாவது பாதியில் தமிழ்நாடு வீராங்கனைகளின் அபார ஆட்டத்தால் 70-66 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி அசத்தலாக வெற்றி பெற்றனர். கேலோ இந்திய போட்டிகளில் தமிழ்நாடு பெண்கள் அணியினர் 2-வது முறையாக தங்கம் வென்று அசத்தினர்.
மேலும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டியில், 90-71 என்ற புள்ளிக்கணக்கில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணி, தமிழ்நாடு அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த போட்டியில் தமிழ்நாடு அணி 86-85 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பஞ்சாப், உத்தரபிரதேசம் அணிகள் மோதியது. இப்போட்டியில், பஞ்சாப் அணி 76-73 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு தங்க பதக்கம் மற்றும் கோப்பையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி இயக்குனர் ஸ்ரீனிவாஸ் மளேக்கர், இந்திய கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் டெக்னிக்கல் கமிஷன் தலைவர் நார்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“