விண்டீஸ் அணி... அதாங்க வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அங்கு விளையாட உள்ளது.
முதற்கட்டமாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 22ம் தேதி சிட்டகாங்கில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், தனது முதல் இன்னிங்ஸில் 324 ரன்களும், விண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்ஸில் வங்கதேசம் 125 ரன்களில் ஆல் அவுட்டாக, 204 இலக்கை நோக்கி விண்டீஸ் ஆட ஆரம்பித்தது. ஆனால், வெறும் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது வங்கதேசம்.
விண்டீஸ் அணியின் இரண்டாம் இன்னிங்ஸில், தொடக்க வீரர்களாக கீரன் பவல் மற்றும் பிரத்வெய்ட் களமிறங்கினர். இதில், முதல் பந்தை எதிர்கொண்ட கீரன் பவல், விக்கெட் கீப்பர் ரஹீமால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
1877ம் ஆண்டு அதிகாரப்பூர்வ டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த 141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஒருவர் முதல் பந்திலேயே ஸ்டெம்பிங் ஆவது இதுதான் முதல் முறையாகும்.