வாவ்! என்ன ஒரு இன்னிங்ஸ் லோகேஷ் ராகுலிடம் இருந்து!.
நேற்று கோலாகலமாக ஆரம்பித்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி மொஹாலியில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் நம்ம ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும், கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற அஷ்வின், டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்பீர் 42 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உலகின் 'நம்பர் 2' டி20 பேட்ஸ்மேன் காலின் மன்ரோவை வெறும் 4 ரன்னில், ஆப்கானிஸ்தானின் 17 வயது இளம் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் எல்பிடபிள்யூ செய்தார். மறுபக்கம், தமிழகத்தின் விஜய் ஷங்கரும் 13 பந்தில் 13 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். (நிடாஹஸ் டிராபி பைனல்-ல சொதப்புனதுக்கு ஐபிஎல்-ல நல்லா யூஸ் பண்ணனும் விஜய்.. கிடைக்குற சான்ஸ் விட்டுடாதீங்க!).
'ஜூனியர் யுவராஜ் சிங்' ரிஷப் பண்ட்டிற்கும் டைம் ஒர்க் அவுட் ஆகவில்லை. விறுவிறு-னு 13 பந்தில் 28 ரன்கள் அடித்தவர், அதே ஸ்பீடுல அவுட்டாகிப் போனார். கம்பீரை பார்க்க சற்று பரிதாபமாகத் தான் இருந்தது. அணி வீரர்களின் சொதப்பலால், மண்ணின் மைந்தன், சற்றே தடுமாறித் தான் போனார். இருப்பினும், 20 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஓரளவிற்கு மேனேஜ் செய்தது டெல்லி.
ஆனால், ஒட்டுமொத்த கதையையும் மொதோ ஆறே ஓவரில் முடித்துவிட்டார் பஞ்சாப் அணியின் ஓப்பனர் லோகேஷ் ராகுல். மனுஷன், இந்தியன் டீமுல, பல மேட்ச் வாய்ப்பு கிடைக்காம வெளில உட்கார்ந்து இருந்த கோபமோ என்னமோ தெரில, 'வாடா நைனா' என்ற மோடில், முதல் ஓவரில் இருந்தே டெல்லி பவுலர்களை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டார். 14 பந்தில் ஆஃப் செஞ்சுரி. வேற லெவல் ஆட்டம் அது. 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள். 16 பந்தில் 51 ரன்கள் எடுத்து, 300க்கும் மேல் ஸ்டிரைக் வைத்து, அவுட்டாகி போய்க்கிட்டே இருந்தார்.
அதன்பின் சார்ஜ் எடுத்துக் கொண்டார் கருண் நாயர். இவரைப் பற்றித் தான் நாம் முக்கியமாக பேச வேண்டியுள்ளது. மனிதர், ரொம்ப நாளா, இந்தியன் டீமுல இடம் கிடைக்காததை நினைத்து வெளிப்படையாகவே புலம்பிக் கொண்டிருந்தார். இந்த ஐபிஎல்-லில் பேர் வாங்கல-னா காணாம போய்டுவோமோ-னு ரொம்பவே பயப்பட்டார். அதன் வெளிப்பாடு, இன்று 33 பந்தில் 50 ரன்கள். வெல்கம் கருண்!.
முடிவில் 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வென்றது பஞ்சாப். கேப்டனாக நம்ம ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ஐபிஎல்-ல் முதல் வெற்றி!.
வாழ்த்துகள் அஷ்வின்!.