kings XI Punjab vs RCB ipl 2020 : ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
பஞ்சாப் அணியில் முதல்முறையாக அதிரடிவீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டார்.டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது பெங்களூர் அணி.தேவ்தத் படிக்கல்லும், ஆரோன் பிஞ்சும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். ஆனால் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 48(39) ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சமி மற்றும் எம்.அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.டி வில்லியர்ஸூம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனைதொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியின் சார்பில், கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.அடுத்ததாக களமிறங்கிய கிரிஸ் கெயில், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிக்சர்களாக விளாசிய அதிரடி மன்னன் கிரிஸ் கெயில் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
கடைசி பந்தில் பஞ்சாப்புக்கு ஒரு ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை சந்தித்த நிகோலஸ் பூரன் சிக்சருக்கு தூக்கியடித்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.
இது பஞ்சாப் அணியின் 2-வது வெற்றியாகும். முதலாவது வெற்றியும் இதே பெங்களூருவுக்கு எதிராகத்தான் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 8-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil