கிட்டிப்புள்ளு – இளம் தலைமுறை மறந்த தமிழர் விளையாட்டு!

இந்த விளையாட்டு இந்தியாவின் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வந்தது என்பது நமக்கு ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாகும்

By: September 21, 2018, 8:05:37 PM

இன்றைய அல்ட்ரா மாடர்ன் உலகில் நாம் நமது மண் சார்ந்த விளையாட்டுகள் பலவற்றை தொலைத்துவிட்டோம்.. தொலைத்துக் கொண்டும் இருக்கிறோம். அப்படி நம்முடைய இளம் தலைமுறையினரிடம் இருந்து மறந்த அல்லது மறைக்கப்பட்ட விளையாட்டு கிட்டிப்புள்ளு. 90’ஸ் கிட்ஸ் வரை கிராமங்களில் விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டை இன்று பல இடங்களில் தேடவேண்டியிருக்கிறது.

அதனாலேயே, கிட்டிப்புள்ளு விளையாட்டு குறித்து இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள இந்த கட்டுரை.

இந்த விளையாட்டு இந்தியாவின் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வந்தது என்பது நமக்கு ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாகும்.

கரகொட்டி, குட்டி-கோல் – கேரளம்
கிட்டிதக்கா – இந்தி மொழி
கில்லி-தண்டா – மகாராட்டிரம்
கில்லி-தண்டு – கோவை
குச்சிக்கம்பு, குச்சி-அடித்தல் – தமிழகப் பொதுவழக்கு
குல்லி-தண்டா – வங்கம்
சிலதா – நீலகிரி
சில்லாங்குச்சி – நெல்லை மாவட்டம்
திப்லி – ஆந்திர மாநிலக் கோண்டு மக்கள்
புள்ளுக்கிட்டி, சிங்காம்புள் – குமரி மாவட்டம்

விளையாடும் முறை

கிட்டிப்புள், கிட்டிக்கோல் ஆகியவை இந்த விளையாட்டுக்குப் பயன்படும் கருவிகள்.

கிட்டிப்புள் சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. அதன் இரு முனைகளும் கூராக இருக்கும். அடிகோல் ஆட்டத்துக்கு முனைக்கூர் இருக்காது. கிட்டிக்கோல் ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 செனடிமீட்டர் நீளமும் கொண்டது.

ஆட்ட வகை

கிட்டிப்புள்ளு விளையாட்டில் இரண்டு முறைகள் தமிழத்தில் இருந்துவந்தன.

கீந்து-குழி ஆட்டம் (இந்தியாவிலும், இலங்கையிலும்)
அடிகோல் ஆட்டம்
ஆடிவோர் வகை
குழு ஆட்டம்
அணி ஆட்டம்
குழு ஆட்டத்தில் ஒருவர் அடிக்க ஏனையோர் எதிராளி ஆவர்.
அணி ஆட்டத்தில் ஆடும்-அணி, எதிர்-அணி என இரு குழுக்கள் அமையும்.

சுமார் ஒருமுழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும்.

குழியில் ஒருமுனை இருக்கும்படி கிடைமட்டமாக கிட்டிப்புள் வைக்கப்படும்.

இந்தப் புள்ளைக் கிட்டிக்கோலால் தட்டிவிடுவர். இதற்குத் தெண்டுதல் என்று பெயர்.

புள் பறக்கும்போது கிட்டிக்கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர், அல்லது எதிர்-அணியினர் பறந்துவரும் புள்ளைப் பிடிக்கவேண்டும். இவ்வாறு தடியால்(கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும்.

புள் வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கிப் புள்ளு வீசப்படும்,
அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும்.

இந்த கிட்டிப் புள் தடியைத் தெண்டில், தாண்டில் என்றெல்லாம் சேலம் மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டம் வேறு வகையிலும் ஆடப்படும்.

அடிகோல் ஆட்டம்

அடிகோல் ஆட்டத்தில் கீந்துகுழி இல்லை. கிட்டிப்புள்ளின் முனை கூராக இருக்காது. ஒவ்வொருவரும் 4 முறையில் விளையாடவேண்டும்.

ஒன்றான் (வெற்றிப்புள்ளி 1)
ஒருகையால் புள்ளைத் தூக்கிப் போட்டு, மற்றொரு கையிலுள்ள கோலால் அடித்தல்

இரண்டான் (வெற்றிப்புள்ளி 2)
ஒரு கையிலுள்ள கோலின்மீது புள்ளை வைத்துத் தூக்கிப்போட்டு அதே கையிலுள்ள கோலால் அடித்தல்

மூன்றான் (வெற்றிப்புள்ளி 3)
ஒரு கையின் ஆள்காட்டி-விரல், சுண்டு-விரல் ஆகியவற்றில் புள்ளை நிறுத்தித் தூக்கிப் போட்டு மறுகையில் உள்ள கோலால் அடித்தல்

நாலான் (வெற்றிப்புள்ளி 4)
ஒரு காலின் மேல்-பாத்ததில் புள்ளை நிறுத்தி அக்காலால் தூக்கிப்போட்டுக் கையிலுள்ள கோலால் அடித்தல்

ஆடும் முறை

ஒன்றான், இரண்டான், மூன்றான், நாலான் முறைமையை ஒவ்வொருவரும் வரிசையாகப் பின்பற்ற வேண்டும். ஆட்டம் தவறாமல் ஆடினால் ஒருவர் தொடர்ந்தாற்போல் 4 படிநிலைகளையும் முடித்து 10 வெற்றிப் புள்ளிகளையும் ஈட்டலாம். ஒன்றில் ஒருவர் தவறினால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும். எல்லாரும் அடித்து முடிந்தபின் மறுமுறை ஆட்டம் வரும்போது ஒவ்வொருவரும் தான் தவறிய படிநிலையில் ஆடவேண்டும். ஒரு படிநிலை முடிந்தால்தான் அடுத்த படிநிலை.

பந்தைப் பிடித்தல்

ஒருவர் புள்ளை அடிக்கும்போது பிறர் பறந்துவரும் புள்ளைக் கையாலோ, துணியை விரித்தோ பிடிக்கலாம். புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டால் அடித்து-ஆடியவர் ஆட்டம் இழப்பார்.

விழுந்த புள்ளை எறிதல்

பிடிபடாமல் புள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அடித்த உத்திக் குழியை நோக்கி ஏறிய வேண்டும். எறியும் பந்தை அடித்தவர் தடுத்து அடிக்கலாம். அடித்தாலும் அடிக்காவிட்டாலும் புள் விழுந்த இடத்திலிருந்து உத்திக் குழி வரையில் தான் அடித்த கோலால் அளந்து வரும் எண்ணிக்கையை, தன் வெற்றிப்புள்ளி ஆக்கிக் கொள்ளலாம். புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் அவுட்

தண்டனை

ஆட்டத்தின் முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவருக்குத் தண்டனை உண்டு.

அதிக புள்ளி பெற்றவர் தன் விருப்பம்போல் புள்ளைப் பிடித்துத் தொலைவுக்கு அடிப்பார். அங்கிருந்து பிறர் ஒவ்வொருவராக அவரவர் அடிக்குப் புள் சென்ற தொலைவிலிருந்து மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே கிட்டி அடித்த இடத்தைத் தொடவேண்டும்.

கிரிக்கெட், கோஃல்ப் போன்ற விளையாட்டுகளே இதிலிருந்து தோன்றியது என்ற கருத்தும் உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Kittipul game

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X