10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 21-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs LSG LIVE Cricket Score, IPL 2025
டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் - லக்னோ முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் - ஐடன் மார்க்ரம் ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இவர்களின் ஜோடியை உடைக்க கொல்கத்தா பவுலர்கள் போராடினர்.
கிட்டத்தட்ட 10 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த இந்த ஜோடியில் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஐடன் மார்க்ரம் 47 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் அடித்து அதிரடியாக மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார். அவருடன் ஜோடி அமைத்த அப்துல் சமத் 6 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். தனது அதிரடி ஆட்டத்தை கடைசி வரை கைவிடாத நிக்கோலஸ் பூரன் 36 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மில்லர் 4 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்த லக்னோ அணி 238 ரன்கள் குவித்தது. அதனால், கொல்கத்தா அணிக்கு 239 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டையும், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொல்கத்தா பேட்டிங்
கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் நரைன் களமிறங்கினர். இரண்டு சிக்சர்கள் விளாசிய டி காக் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரஹானே தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த நரைன் 13 பந்துகளில் 30 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினார்.
ரஹானே – வெங்கடேஷ் ஜோடி சிறப்பாக ஆடி வந்த நிலையில், ரஹானே 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து களமிறங்கிய ரமன்தீப் 1 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து வந்த ரகுவன்ஷி 5 ரன்களில் அவுட் ஆனார். கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
அடுத்து ரஸல் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த வெங்கடேஷ் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 1 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக ரிங்கு சிங் களமிறங்கி, அதிரடியாக ஆடினார். ஆனால் மறுமுனையில் ஆடிய ரஸல் ஒரு சிக்சருடன் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து ரானா களமிறங்கினார். ரிங்கு சிங் – ரானா ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். இருப்பினும் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லக்னோ அணியில் ஆகாஷ் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும், ஆவேஷ் கான், திக்வேஷ், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது.
இரு அணி பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், வருண் சக்கரவர்த்தி.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 5 போட்டிகளில், கொல்கத்தா 2 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் லக்னோ 3 முறை வெற்றி பெற்றுள்ளது.