Kolkata Knight Riders vs Lucknow Super Giants IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில், 28வது லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், குவிண்டன் டி காக் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர். 1.5 ஓவர்களில் குயிண்டன் டிகாக் 10 ரன்கள் எடுத்த நிலையில், வைபவ் அரோரா பந்தில் சுனில் நரைனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, தீபக் ஹூடா பேட்டிங் செய்ய வந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடிய நிலையில், தீபக் ஹூடா 10 பந்துகளில் 8 ரன்கல் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, ஆயுஷ் படோனி பேட்டிங் செய்ய வந்தார். ஆயூஷ் படோனியும் கே.எல். ராகுலும் நிதானமாக விளையாடினார்கள்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 27 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்தில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தபோது, 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்திருந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் வருண் சக்ரவர்த்தி பந்தில், பில் சால்ட் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் ஆயூஷ் படோனி உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தபோது, 27 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்த அயூஷ் படோனி, சுனில் நரைன் பந்தில் ரகுவன்ஷியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, க்ருணால் பாண்டியா வந்து நிகோலஸ் பூரண் உடன் ஜோடி சேர்ந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தபோது, 32 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த நிகோலஸ் பூரண், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை பில் சால்ட் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, அர்ஷத் கான் பேட்டிங் செய்ய வந்தார்.
20-வது ஓவரின் கடைசி பந்தில் அர்ஷத் கான் மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆனார்.
இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. இதன் மூலம், கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியில், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.
இந்த ஜோடி முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1.3 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்தபோது, 6 பந்துகளில் 6 ரன்கள் அடித்திருந்த சுனில் நரைன் மோஹ்சின் கான் பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து, அங்கிரிசஷ ரகுவன்ஷி பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், அவர் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டும் அடித்து, மோஹ்சின் கான் பதில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
அடுத்து, ஷ்ரேயஸ் ஐயர் பில் சால்ட் உடன் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயஸ் நிதானமாக விளையாட, பில் சால்ட் அதிரடியாக சிக்சர், பவுண்டரி என பிண்ணி எடுத்தார்.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பில் சால்ட் 47 பந்துகளில் 89 ரன்களுடனும் ஷ்ரேயஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
இரு அணிகளின் விளையாடும் 11 வீரர்களின் விபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கே.எல் ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர்
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை விளையாடி 4 போட்டிகளில் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மறுபுறம், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 5 போட்டிகளில் 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியுற்றன. அதிலிருந்து மீண்டு வர கடுமையாக போராடுவார்கள். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 3 ஆட்டங்களில் கொல்கத்தா அணி ஒரு முறை கூட வென்றதில்லை. அதேநேரத்தில், லக்னோ 3 முறையும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.