10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs SRH LIVE Cricket Score, IPL 2025
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - சுனில் நரைன் ஜோடி களமிறங்கினர். இதில் அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த டி காக் 1 ரன்னுக்கும், நரைன் 7 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 4 சிக்ஸரை பறக்கவிட்ட கேப்டன் ரஹானே 38 ரன்னில் அவுட் ஆனார்.
அவருக்குப் பின் வந்த ஆங்கிரிஷ் ரகுவன்ஷி அரைசதம் அடித்து 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த வெங்கடேஷ் - ரிங்கு சிங் ஜோடி சிக்ஸர், பவுண்டரிகளை மாறி மாறி விரட்டி அடித்தனர். குறிப்பாக, கம்மிஸ் வீசிய 19-வது 20 ரன்கள் எடுத்த வெங்கடேஷ் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 60 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரிங்கு சிங் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 200 ரன்கள் எடுத்தது. இதனால், ஐதராபாத் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
தொடர்ந்து 201- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் அதிர்ச்சி தொடங்கம் கொடுத்தனர். ஹெட் 4 ரன்களுக்கும், அபிஷேக் சர்மா 2 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இஷான் கிஷன் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் ஐதராபாத் அணி 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இணைந்த நித்தீஷ் ரெட்டி, கமின்து மெண்டீஸ் ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடியது. இவர்கள் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்தபோது, 15 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து நித்தீஷ் ரெட்டி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த க்ளாசன் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையி்ல, மெண்டீஸ் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் கம்மின்ஸ் மட்டும் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிரடியாக ஆடிய க்ளாசன், 21 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன், 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 16.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்று இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா அணி தரப்பில், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ரஸல் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ரானா, நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு சென்ற நிலையில், 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), கமிந்து மெண்டிஸ், சிமர்ஜீத் சிங், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.
நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி, ஒன்றில் வெற்றி பெற்றுள்ள ரஹானே தலைமையிலான கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. இதேபோல், 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் 8-வது இடத்தில் இருக்கிறது.
இந்த இரு அணிகளுமே கடைசியாக ஆடிய போட்டிகளில் தோல்வியடைந்தன. அந்தத் தோல்வியில் இருந்து மீள கடுமையாக போராடுவார்கள். சொந்த மண்ணில் 2-வது போட்டியை ஆடும் கொல்கத்தா வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த நினைக்கும். அதற்கு முட்டுக்கட்டை போடவே ஐதராபாத் பார்க்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 28 போட்டிகளில், ஐதராபாத் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.