Advertisment

பயிற்சியின் போது காயம்... வலியில் துடித்துப் போன ராகுல்: முதல் டெஸ்ட்டில் ஆடுவாரா?

ராகுல் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவரது முழங்கையில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து தாக்கியது. முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராகுல் தொடர்ந்து பேட்டிங் செய்ய முயன்றார்.

author-image
WebDesk
New Update
KL Rahul Injury scare walks off field India match simulation session in Perth Tamil News

வெஸ்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீரர் கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Injured KL Rahul walks off field in India’s match simulation session in Perth

இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பெர்த்தில் உள்ள வெஸ்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதலில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்து இந்திய வீரர்கள், தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிந்து பயிற்சிப் போட்டியில் ஆடி வருகின்றனர். 

ராகுல் காயம் 

இந்த நிலையில், இன்று காலை நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீரர் கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அவர்  ஜெய்ஸ்வால் உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார். கேப்டன் ரோகித் சர்மா பெர்த்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் களமாட மாட்டார் என்று கூறப்படும் நிலையில், அவரது இடத்தில் ராகுல் களமிறங்கினார். 

ராகுல் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவரது முழங்கையில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து தாக்கியது. முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராகுல் தொடர்ந்து பேட்டிங் செய்ய முயன்றார். ஆனால், வலி அதிகமாக இருந்ததால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பிசியோதெரபிஸ்ட் அவருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார். இருப்பினும், அவரது காயம் குறித்த விரிவான தகவல்கள் பகிரப்படவில்லை. 

ரோகித்துக்குப் பதில் ராகுல் தொடக்க வீரராக பார்க்கப்படும் நிலையில், அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்குள் தயாராகி விடுவாரா? அல்லது காயத்தால் விலகுவாரா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

சொந்த மண்ணில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ராகுல் இடம் பெற்றார். அவர் பெங்களுருவில் நடந்த முதல் போட்டிக்குப் பிறகு ஆடும் லெவன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். பின்னர், மெல்போர்னில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற ஆட்டத்திற்கான இந்தியா ஏ அணியில் அவர் சேர்க்கப்பட்டார்.

ரோகித்துக்கு பேக்-அப்பாக இந்தியாவின் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரனுடன் இணைந்து தொடக்க வீரராக களமாடிய ராகுல், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் அவர் 4 மற்றும் 10 ரன்களை எடுத்தார். அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர் கோரி ரோச்சிசியோலிக்கு எதிராக மோசமான ஆட்டமிழப்பிற்காகவும் விமர்சிக்கப்பட்டார். 

51 டெஸ்ட் போட்டிகளில் 33.87 சராசரி கொண்ட ராகுல், ஆஸ்திரேலியாவில் 9 இன்னிங்ஸ்களில் 187 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs Australia Kl Rahul Australia Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment