ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆட களமாடிய இந்திய அணியில் டாப் ஆடர் வீரர்கள் வழக்கம் போல் சொதப்பித் தள்ளினர். ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 93 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனிடையே, இந்த ஆட்டத்தில் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் தொடக்க வீரரான கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 26 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கள நடுவர் முதலில் அவுட் வழங்கவில்லை. நடுவரின் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் அப்பீல் செய்தனர். ரீப்ளேவில் ராகுலின் பேட்டில் பந்து பட்டதற்கான துல்லியமான அறிகுறி ஏதுமில்லை. மேலும் பேட் முதலில் கால் பேடில்படுவதுபோல் தெரிந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும்போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து அவுட் என கொடுக்கப்பட்டது.
அந்த நேரத்தில் பந்து பேட்டில் பட்டதா அல்லது பேட் முதலில் பேடில் பட்டதா என்பதை கண்டறிய ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும் 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் அவுட் என தீர்ப்பளித்தார். இதனால் ராகுல் அதிருப்தியுடன் வெளியேறினார். நடுவரின் இந்த முடிவு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, ராகுல் அவுட்டா இல்லையா? எனக் கேள்வி எழுப்பிரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“