ஐ.பி.எல் 2025 தொடர் மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தாண்டு இறுதியில் ஏலம் நடைபெற உள்ளது. இதற்கிடையில், 10 அணிகளுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளன. அந்தந்த அணிகள் தக்கவைக்கும் வீரர்களை தவிர்த்து விட்டு மற்ற வீரர்களை கழற்றி விட உள்ளன.
இந்நிலையில், இந்திய நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டரான கே.எல்.ராகுலை வரவிருக்கும் ஐ.பி.எல் 2025 (இந்தியன் பிரீமியர் லீக்) சீசனுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) தக்கவைத்துக் கொள்ள உள்ளது. ஆனால் கேப்டனாக இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்த விரும்புவதால், கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக ராகுல் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஐ.பி.எல் 2025 சீசனில் யார் அணியை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.
லக்னோ அணியால் கே.எல் ராகுல் தக்கவைக்கப்படுவார் என்றும், ஆனால் கேப்டன் பொறுப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. க்ருணால் பாண்டியா மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய இரண்டு வீரர்கள் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள் என்றும் லக்னோ அணிக்கு நெருக்கமான கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்திப்பு
நேற்று திங்கள்கிழமை கே.எல் ராகுல் உரிமையாளர் கோயங்காவை கொல்கத்தாவின் அலிப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் நான்கு மணி நேரம் இருவரும் கலந்துரையாடினர். அதன் பிறகு, ராகுல் தனது துலீப் டிராபி பயிற்சியைத் தொடங்க பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு புறப்பட்டார். அவர் சுப்மான் கில் தலைமையிலான ‘ஏ’ அணிக்காக விளையாடுகிறார்.
“திங்கள்கிழமை லக்னோ அணி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் கோயங்காவுடனான கே.எல் ராகுல் சந்திப்பு அதிகாரப்பூர்வமானது. கேப்டன் பதவி பற்றியும், அவரை தக்கவைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், வரவிருக்கும் சீசனில் ராகுல் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார். கோயங்காவுக்கு ராகுல் மீது முழு நம்பிக்கை உள்ளது. மேலும் அவர் ஒரு வீரராகத் தக்கவைக்கப்படுவார், ஆனால் அணிக்கு கேப்டனாகக் இருக்க மாட்டார்.
நாங்கள் இன்னும் கேப்டன் விருப்பத்தை ஆராய்ந்து வருகிறோம், ஆனால் வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் நிபந்தனைகளை பி.சி.சி.ஐ ஒப்புக்கொண்டதால் எங்களிடம் இரண்டு வீரர்கள் (க்ருனால் பாண்டியா மற்றும் நிக்கோலஸ் போரன்) போட்டியில் உள்ளனர்," என்று லக்னோ அணிக்கு நெருக்குமான ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நல்ல நிலையில் இருந்தும் பிளேஆஃப்-க்கு தகுதி பெறத் தவறியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி மோசமான தோல்வியைப் பெற்ற நிலையில், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி கொந்தளித்து பேசியிருந்தார் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல்-லுக்குப் பிறகு, ராகுல் சரியாக விளையாடவில்லை. மேலும், அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்தியா வென்ற ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“