worldcup 2023 | india-vs-australia | kl-rahul: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மிகவும் பரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.
இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குலதீப், பும்ரா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஹர்திக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து, 200 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் இஷான் கிஷன், கேப்டன் ரோகித், ஷ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினர்.
இதனால் இந்தியா 3 ஓவர்கள் முடிவில் 3 ரன்கள் மட்டும் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது. இதன்பின்னர் களத்தில் இருந்த கோலி - ராகுல் ஜோடி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் விளாச சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி வரை களத்தில் இருந்த ராகுல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ராகுல் 97 ரன்களும், ஹர்திக் 11 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 41.2 வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்த இந்தியா ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை டெல்லியில் வருகிற 11ம் தேதி சந்திக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/ea0de07c-10a.jpg)
ராகுல் சோகம்
இந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் ஆட்டத்தை சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார். சிக்ஸர் பறக்கவிட்டு போட்டியை வென்றால், அந்த பேட்ஸ்மேன் பொதுவாக துள்ளிக் குதித்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார். ஆனால், நேற்று ராகுல் சிக்ஸரை அடித்த பின்னர், 'இப்ப நான் ஏன் சிக்ஸர் அடித்தேன்' என்பது போல் சோகத்தில் பேட்டை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்தார். சிக்ஸர் விளாசிய ராகுல் ஏன் இப்படி சோகத்தில் இருக்கிறார் என்று போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போட்டி முடிந்த பிறகு, வர்ணனையாளர் இயன் பிஷப் கே.எல் ராகுலிடம் ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றை கேட்டார். அப்போது அவர், அணியை வெற்றி பெற வைத்து விட்டு ஏன் சோகமாக கீழே அமர்ந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ராகுல், "நான் அந்த பந்தை நன்றாக அடித்து விட்டேன். பவுண்டரி, அதன் பிறகு சிக்சர் அடித்தால் சதத்தை எட்ட முடியும் என்று கணக்கிட்டு விளையாடினேன். ஆனால் அந்த ஷாட்டை நான் நன்றாக அடித்து விட்டேன். பந்து சிக்சருக்கு சென்றதால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டது. சதத்தை எட்டாததற்கு எந்த கவலையும் இல்லை. இன்னொரு தருணத்தில் சதம் அடிப்பேன் என்று நம்புகிறேன்'என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“