kl rahul news in tamil: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 12ம் தேதி முதல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் பதிவு செய்துள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் ஐந்தாம் நாளான நேற்று இந்திய அணி 2வது இன்னிங்சில் 298 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து களம் கண்ட இங்கிலாந்து அணியோ 120 ரன்னில் சுருண்டது. எனவே, இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசதியுள்ளது. இந்த சிறப்பான வெற்றிக்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் தங்களை முழு ஒத்துழைப்பை கொடுத்த நிலையில், 2வது இன்னிங்சில் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஷமி ஜோடி ஒரு படி மேல் சென்றனர். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டம் மைதானத்தில் குவிந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு அனைவரையும் வியக்க செய்தது.

இதனால் கடுப்பான இங்கிலாந்து வீரர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஸ் பட்லர் பும்ராவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். வார்த்தை போரை முடிவுக்கு கொண்டு வந்த பும்ரா தனது மட்டையின் மூலம் அவர்களுக்கு பதிலளித்தார். இவருடன் மறுமுனையில் இருந்த ஷமியும் தனது பங்கிற்கு மட்டையை சுழற்றி பதிலளித்தார்.
போட்டிக்கு பிறகு இந்த சம்பவம் குறித்து பேசிய கேஎல் ராகுல்,”எங்கள் அணியில் ஒருத்தரை சீண்டினா 11 பேரும் வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ள ராகுல், “இரு பலமான அணிகள் மோதும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான். எங்களுக்கும் போட்டியின் போது இதுபோன்று சற்று வார்த்தைப் போரில் ஈடுபடுவது பிடிக்கும். ஆனால் எங்களின் அணியில் ஒருவரை நீங்கள் தாக்கி பேசினாலோ அல்லது சீண்டினாலோ நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம். எங்களது பௌலிங் இன் போதும் நாங்கள் உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். அதனாலேயே எங்களால் வெற்றி பெற முடிந்தது” என்று கூறியுள்ளார்.
இந்த போட்டியில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் அணி ஒரு வலுவான ஸ்கோரை எட்ட அடித்தளமிட்டர். மேலும், முதல் இன்னிங்சில் 250 பந்துகளில் 129 (1 சிக்ஸர், 12 பவுண்டரி உட்பட) ரன்கள் சேர்த்து அசத்தினார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil