10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்திற்கு முன்னதாக கேப்டன் கே.எல் ராகுலை விடுவித்தது. அவர் அந்த அணியில் இருந்து வெளியேறியதற்கு, லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடந்த சீசன் போட்டியின் போது மைதானத்தில் ராகுலிடம் நடந்த கொண்ட விதம், முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தற்போது ராகுல் மெகா ஏலத்தில் களமாடும் நிலையில், அவரை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் கடுமையாக போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கேப்டன் பதவி தனக்கு முக்கியமில்லை என்றும், "அன்பு, அக்கறை மற்றும் மரியாதை" காட்டும் ஒரு அணிக்கு தான் செல்ல விரும்புவதாகவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கே.எல்.ராகுல் பேசுகையில், "என்னைப் பொறுத்தவரையில், ஓப்பனிங், மிடில் ஆர்டர், கீப்பிங், ஃபீல்டிங் என நான் எப்போதும் நெகிழ்வாக இருக்கிறேன். எனக்கு எந்த ரோல் அல்லது பொறுப்பு வழங்கப்பட்டாலும், அது எனக்கு ஓகே தான்.
நான் யாரிடமும் சென்று எனக்கு கேப்டன் பதவி வேண்டும் எனக் கேட்கமாட்டேன். எனது தலைமைத்துவ திறமை போதுமானது என்று நீங்கள் உணர்ந்தால், நான் கிரிக்கெட் விளையாடும் விதம் சிறப்பாக இருந்தால், நான் என்னைக் கையாள்வது மற்றும் கடந்த காலங்களில் அணிகளைக் கையாண்ட விதம் மற்றும் நீங்கள் என்னை தகுதியானவனாக நினைத்தால், அந்த பொறுப்பை ஏற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது என்னை உருவாக்குவது அல்லது உடைப்பது அல்ல. நான் ஒரு நல்ல சூழலைக் கொண்ட அணியில் இருக்க விரும்புகிறேன். அந்த அணியால் நீங்கள் நேசிக்கப்பட வேண்டும். அக்கறை காட்டப்பட வேண்டும். அவர்களால் நீங்கள் மதிக்கப்பட வேண்டும். அந்த அணியில் உள்ள ஒவ்வொருவரும் ஐ.பி.எல் பட்டம் வெல்ல வேண்டும் என்கிற ஒற்றை இலக்கை கொண்டிருக்க வேண்டும்.
இப்போது நான் புதிதாகத் தொடங்க விரும்புகிறேன். நான் எனது விருப்பங்களை ஆராய விரும்புகிறேன். மேலும் எனக்கு சுதந்திரம் கிடைக்கும் இடத்திற்குச் சென்று விளையாட விரும்புகிறேன், அங்கு அணியின் சூழல் இலகுவாக இருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் விலகிச் சென்று உங்களுக்கான நல்லதைக் கண்டுபிடிக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“