ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்தியா, 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Kris Srikkanth calls Shubman Gill ‘highly overrated’
குறிப்பாக, இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் முக்கிய காரணம் எனப் பலரும் குற்றம் சட்டி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். முன்னணி வீரர்களான ரோகித், விராட் கோலி சொதப்பிய வேளையில், இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் அணிக்கு வலு சேர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 5 இன்னிங்சில் விளையாடி வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் தோல்விக்கு ஒரு காரணமாய் அமைந்தார்.
ஸ்ரீகாந்த் தாக்கு
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமை தேர்வாளருமான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் , சுப்மன் கில்லை "மிகவும் அதிகமாக மதிப்பிடப்பட்ட" கிரிக்கெட் வீரர் என்றும், அவ்ருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு இந்திய அணி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “சுப்மான் கில் மிகைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் என்பதை நான் எப்போதும் கூறி வருகிறேன், ஆனால் யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில், அவர் மிகவும் அதிகமாக மதிப்பிடப்பட்ட (ஓவர்ரேட்டட்) கிரிக்கெட் வீரர்.
கில்-லுக்கு இவ்வளவு அதிகமாக வாய்ப்புகளை வழங்குவதை பார்க்கையில், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு கூட டெஸ்டில் இன்னும் அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்குமா என்று சிலர் ஆச்சரியப்படலாம். சூர்யகுமாருக்கு டெஸ்டில் சிறப்பான தொடக்கம் இல்லை. ஆனால் அவரிடம் நுட்பமும் திறமையும் உள்ளது. இருப்பினும், தேர்வாளர்களும் நிர்வாகமும் இப்போது அவரை ஒயிட் பாலில் சிறந்த வீரராக பாக்ஸ் செய்திருக்கிறார்கள். எனவே, இதன் அர்த்தம் நீங்கள் புதிய திறமையான வீரர்களை பார்க்க வேண்டும்.
உதாரணமாக, ருதுராஜ் கெய்க்வாட் முதல் தர கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர்கள் அவரை தேர்வு செய்வதில்லை. சாய் சுதர்சன் போன்ற ஒருவர், அதுபோன்று இந்தியா ‘ஏ’ அணிக்கான சுற்றுப்பயணங்களில் சிறப்பாக செயல்பட்டார். இதுபோன்ற திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்.
அதற்கு பதிலாக அவர்கள் கில்லைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வட்டங்களைச் சுற்றித்தான் ஓடுகிறார்கள். ஒன்பது தோல்விகளுக்குப் பிறகு பத்து வாய்ப்புகள் மற்றும் பத்தாவது வாய்ப்பில் ஸ்கோர் செய்ததால் கில் இப்போது உயிர் பிழைத்திருக்கிறார். அதன் காரணமாக, அவருக்கு இன்னும் பத்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்திய விக்கெட்டுகளில் எவரும் மற்றும் அனைவரும் ரன்களை குவிக்கலாம். வெளிநாடுகளில் அது சவாலானது. அங்குதான் கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்." என்று அவர் கூறினார்.
பத்ரிநாத் கடும் சாடல்
முன்னதாக, சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால் இந்நேரம் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று இந்திய முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "சுப்மன் கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராக இருந்திருந்தால் எப்போதோ அணியிலிருந்து நீக்கி இருப்பார்கள். இந்த தொடரில் அவர் பேட்ஸ்மனாக எந்த உதவியும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அதிக நேரம் களத்தில் நின்று நிறைய பந்துகளை சந்திக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எதிரணி பவுலர்களை சோர்வாக்க முடியும். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கில் இந்த தொடரில் எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கிறேன்" என அவர் கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.