பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
கராத்தே, ஜூஜோஸ் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை ஒருங்கிணைத்த விளையாட்டாக உள்ள குடோ தற்காப்பு கலை விளையாட்டை தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். தேசிய விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுக்கான தேசிய அளவிலான இரண்டாவது போட்டிகள், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலான் பகுதியில் நடைபெற்றது.
தேசிய அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா,உத்தரபிரதேசம், அரியானா என இந்தியாவில் 25 மாநிலங்களில் இருந்து சுமார் 2500 -க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அணி சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
9 வயது முதல் 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் வெவ்வேறு பிரிவுகளில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இந்நிலையில், கோவை திரும்பிய கூடோ விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி வளாகத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதில் மேளதாளம் முழங்க பதக்கம் வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரேம்,புகழேந்தி,பிராங்ளின் பென்னி ஆகியோருக்கு ரூபாய் நோட்டு மாலை மற்றும் கிரீடங்கள் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக வெற்றி வீராங்கனைகளுக்கு சிலம்பாட்ட வீரர்கள் வீரதீர சாகசங்கள் செய்து வரவேற்பு வழங்கினர். இதில் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட குடோ சங்க நிர்வாகிகள் பேசுகையில், "குடோ விளையாட்டை, மத்திய அரசு அங்கீகரித்து வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை என குறிப்பிட்ட அவர் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் இதை கவனத்தில் எடுத்து குடோ விளையாட்டிற்கு அங்கீகாரம் வழங்கினால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“