India-vs-south-africa | kuldeep-yadav: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (வியாழக்கிழமை) ஜோகன்னஸ்பர்க்கில் இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதம் விளாசி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 202 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதனால், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 1-1 என்கிற கணக்கில் தொடரை சமன் செய்தது.
வரலாறு படைத்த குல்தீப் யாதவ்
இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 2.5 ஓவரிகளில் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் முதல் ஓவரின் கடைசி பந்தில் தனது முதல் விக்கெட்டையும், இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் இரண்டாவது விக்கெட்டையும் எடுத்தார். தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின் 14வது ஓவரின் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் குல்தீப் தனது மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
குல்தீப் யாதவ் நேற்று தன்னுடையை 29வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பிறந்தநாள் அன்று 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையைப் பெற்றார். மேலும், பிறந்தநாளன்று 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அவர் புதிய உலக சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தம்முடைய பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் மற்றும் சிறந்த பவுலிங்கை (5/17) பதிவு செய்த பவுலர் ஆகிய 2 தனித்துவமான உலக சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்பது டி20 போட்டிகளில் குல்தீப்பின் இந்தியாவுக்கான சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒட்டுமொத்தமாக இந்த ஃபார்மெட்டில் இந்தியாவுக்காக நான்காவது சிறந்த பந்துவீச்சாகும்.
இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூலம், டி20 போட்டிகளில் இரண்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார்.
டி20யில் குல்தீப் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை ஜூலை 3, 2018ல் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார்.
பிப்ரவரி 1, 2017 அன்று பெங்களூருவில் இங்கிலாந்துக்கு எதிராக 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் படைத்தார். ஆனால் டி20 போட்டிகளில் அவரால் மேலும் ஐந்து விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.
குல்தீப்புக்கு முன் புவனேஷ்வர் குமார் மட்டுமே இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலக டி20 அரங்கில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில், 13 பந்துவீச்சாளர்கள் மட்டுமே டி20-களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை எடுத்துள்ளனர். இதுவரை யாரும் மூன்று முறை அவ்வாறு செய்ய முடியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.