India vs England, 5th Test, Dharamsala | Kuldeep Yadav: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி, தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் எடுத்தனர். மிகச்சிறப்பாக பந்துவீசிய இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த குல்தீப்
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (0) விக்கெட்டை கைப்பற்றியதுடன் சுழலில் மிரட்டி வந்த குலதீப் யாதவ் தனது 5வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது நான்காவது முறையாகும். இதன் மூலம் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும், குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
குலதீப் யாதவ் 1871 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி, அக்சர் படேல் (2205 பந்துகள்) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா (2520 பந்துகள்) ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார்.
அத்துடன், தென் ஆப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ் (134), இங்கிலாந்தின் ஜானி வார்டில் (102) ஆகியோருக்குப் பிறகு 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் என்கிற பெருமையையும் குல்தீப் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“