அணியில் இடம் கிடைக்காததால் குல்தீப் யாதவ் தற்கொலை முயற்சி!

இதனால் ஏற்பட்ட வேதனையில் கிரிக்கெட்டை துறந்து விடலாம் என்று கூட நினைத்தேன். அத்துடன் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்தேன்.

‘சைனா மேன்’ பவுலரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த 22 வயதான குல்தீப் யாதவ், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தர்மசாலாவில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அது முதல் சுழற்பந்து வீச்சில் ஜொலித்து வரும் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். குல்தீப் மற்றும் சாஹலின் அபாரமான பவுலிங்கால், இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்களாக விளங்கிய அஷ்வின், மற்றும் ஜடேஜாவால் தற்போது அணியில் இடம் பிடிக்க முடிவதில்லை. குல்தீப் யாதவ் இதுவரை 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 9 விக்கெட்டும், 12 ஒருநாள் போட்டியில் 19 விக்கெட்டும், 5 இருபது ஓவர் போட்டியில் 6 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி வித்தியாசமாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வரும் குல்தீப் யாதவ் தான் கடந்த காலத்தில் அடைந்த மனவேதனைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான் 13 வயதில் உத்தரபிரதேச மாநில 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் தேர்வாளர்கள் என்னை அணியில் சேர்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட வேதனையில் கிரிக்கெட்டை துறந்து விடலாம் என்று கூட நினைத்தேன். அத்துடன் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்தேன். எல்லோருக்கும் ஆத்திரத்தில் இதுபோன்ற எண்ணங்கள் வரத்தான் செய்யும். நல்லவேளையாக அந்த தற்கொலை முயற்சி கைகூடவில்லை.

வேகப்பந்து வீச்சாளராக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஆனால் பயிற்சியாளர் தான் என்னை கட்டாயப்படுத்தி சுழற்பந்து வீச்சில் ஈடுபட வைத்தார். நான் சில பந்துகளை வீச ஆரம்பித்ததும், அதேமாதிரியாக தொடர்ந்து பந்து வீசும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது தான் எனது பந்து வீச்சில் உள்ள வித்தியாசம் எனக்கு தெரிந்தது.

நான் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்கினேன். கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு பொழுதுபோக்காக தான் நினைத்து ஆடினேன். ஆனால் எனது தந்தை தான் கிரிக்கெட்டை வாழ்க்கையாக நினைத்து விளையாடும்படி என்னை வற்புறுத்தியதுடன், என்னை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து பயிற்சி பெற வைத்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னேவின் ஆட்ட வீடியோக்களை பார்த்து எனது பந்து வீச்சு நுணுக்கத்தை வளர்த்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kuldeep yadav ignored by selectors contemplated suicide

Next Story
இது ரவிச்சந்திரன் அஷ்வினின் ‘மனைவிக்கு மரியாதை’!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express