இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், கேப்டன் ரோஹித் கூறிய அறிவுரையை ஏற்காமல் குல்தீப் யாதவ் பந்து வீசிய நிலையில், முக்கிய விக்கெட் வீழ்ந்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்களும், இந்தியா 307 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 145 ரன்களுக்குள் சுருண்டது.
அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். பென் டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகிய முக்கிய விக்கெட்களை தொடக்கத்திலே வீழ்த்தினார் அஸ்வின். இருப்பினும் தொடக்க வீரர் சாக் க்ராலி அரை சதம் அடித்து, சிறப்பாக விளையாடி வந்தார். இந்தநிலையில் தான் குல்தீப் யாதவ் தனது சிறந்த பந்துவீச்சு மூலம் சாக் க்ராலியை 60 ரன்களில் போல்டாக்கினார்.
இந்த விக்கெட் கிடைத்தது ஒரு சுவாரஸ்ய சம்பவமாக மாறியுள்ளது. ஏனெனில் சாக் க்ராலி சிறப்பாக ஆடி வந்தார். குல்தீப் பந்து வீச வந்தப்போது, கேப்டன் ரோகித் பீல்டிங்கை மாற்ற விரும்பினார். ஆனால் கேப்டனின் அறிவுரையை ஏற்காத குல்தீப் பீல்டிங்கை அப்படியே வைத்து பந்துவீசினார். இதற்கு கைமேல் பலனாக சாக் க்ராலியின் விக்கெட் கிடைத்தது.
சாக் க்ராலி பேட்டிங் செய்ய வந்ததால், ரோஹித் குல்தீப்பிடம் ஃபீல்டரை உள்ளே கொண்டு வந்தால் நல்லது என்று அறிவுறுத்தினார், ஆனால் ரிஸ்ட்-ஸ்பின்னரான குல்தீப் பீல்டரை எல்லையில் வைத்திருப்பது சிறந்த யோசனையாக இருக்கும் என்று கருதினார். ரோஹித் ஒப்புக்கொண்டு முதல் ஸ்லிப்பில் தனது நிலையை எடுக்கத் திரும்பினார். அடுத்த பந்திலேயே, சாக் க்ராலி அந்த பகுதி வழியாக பந்தை எல்லைக்கு அடிக்க முயற்சித்ததால், அந்த முடிவு தங்கமாக மாறியது. இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை ஸ்டம்ப் மைக்கில் பதிவு செய்ததை தினேஷ் கார்த்திக் கமெண்டரியில் உறுதிப்படுத்தினார்.
"குல்தீப் அங்குள்ள இடைவெளியை கவர் செய்ய வேண்டுமா என்று ரோகித் கேட்டார். இல்லை, ஒரு இடைவெளி இருக்கட்டும், கவர் இருக்கட்டும், ஆனால் மிட்-ஆஃப்பை பின்னுக்குத் தள்ளுங்கள் என்று குல்தீப் கூறினார். அடுத்த பந்தில், சாக் க்ராலி கவர் நோக்கி விளையாட, போல்டு ஆனது," என்று தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்யும் போது கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“