Tamilnadu Cricket Team | Lakshmipathy Balaji: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமிபதி பாலாஜி. கடந்த 2002 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்த இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், 30 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும், 5 டி20 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். 2008 முதல் 2014 வரையிலான 73 ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று 76 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
எல். பாலாஜி தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்து வரும் நிலையில், அவர் எதிர் வரும் 2024-25 உள்நாட்டு தொடருக்கான தமிழக அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த குலத்தன் குல்கரனி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், உதவிப் பயிற்சியாளராக பணியாற்றி வரும் பாலாஜி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/d43d6623-5fe.jpg)
மும்பையைச் சேர்ந்த குலத்தன் குல்கரனி தலைமையிலான தமிழ்நாடு கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் மும்பையிடம் தோல்வியுற்று வெளியேறியது. அவருக்கும் அணியின் கேப்டன் சாய் கிஷோர் உள்ளிட்ட சில வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தான் தோல்வியை கொடுத்ததாக கேப்டன் சாய் கிஷோர் மீது பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி பரபரப்பான குற்றம் சாட்டை வைத்தார். அவரின் இந்த பேச்சுக்கு தமிழக கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அவரை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக சாடி இருந்தார்கள். இதனையடுத்து, தனது தனிப்பட்ட காரணங்களால் அடுத்த சீசனில் இருந்து தமிழக அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று தெரிவித்த குலத்தன் குல்கரனி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், தமிழக கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான எல். பாலாஜி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். அவர் அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்த காலக் கட்டத்தில், முக்கிய ஆலோசனைகளை மட்டுமின்றி, உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் வழங்கியதாக தமிழக வீரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் கேப்டனாக வழிநடத்திய தமிழக அணி 2011-2012 சீசனில் ரஞ்சி டிராபியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
தற்போது பாலாஜி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் என் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் போன்ற மூத்த வீரர்கள் அடங்கிய தமிழக கோல்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். "முந்தைய சீசனில் குல்கர்னியிடம் உதவியாளராக பாலாஜி பணிபுரிந்ததால், அவருக்கு இது ஒரு ப்ரோமோஷனாக இருக்கும். தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பாலாஜிதான் சரியான நபர். அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும், ”என்று தமிழக கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“