2013-ம் ஆண்டு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் கசிந்தன.
இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி விசாரணை நடத்தி தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி தண்டனையை முடிவு செய்து அறிவித்தது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை முடிந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பின.
லலித் மோடி பரபர குற்றச்சாட்டு
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிக்கு விதை போட்டவரும், ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) நிர்வாகத்தின் முன்னாள் தலைவருமான லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த நடுவர்களை வைத்து போட்டியில் ஆடியதாக பி.சி.சி.ஐ முன்னாள் செயலாளர் என் சீனிவாசன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பார்க்க லலித் மோடி சமீபத்தில் ராஜ் ஷமானி யூடியூப் சேனலில் பேசுகையில், “அவருக்கு (என் சீனிவாசன்) ஐ.பி.எல் பிடிக்கவில்லை. ஐ.பி.எல் வேலை செய்யும் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் அது வேலை செய்யத் தொடங்கியதும் அனைவரும் உள்ளே வரத் தொடங்கினர். அவர் குழுவின் உறுப்பினராகவும் செயலாளராகவும் இருந்தார். எனவே அவர் எனக்கு மிகப்பெரிய எதிரியாக இருந்தார். நான் அவருக்கு எதிராகச் சென்றேன், அதனால் அவர் பல விஷயங்களைச் செய்தார், அம்பயர் பிக்சிங் செய்தார். 'நான் அதைச் செய்தேன்' என என்னிடம் அவர் சொன்னார்.
அதற்காக நான் அவரை குற்றம் சாட்டினேன். அவர் அம்பயரை மாற்றினார். நான் அதைப் பற்றிய இரண்டு விஷயங்களை அப்போது நினைக்கவில்லை. ஆனால் அவர் சென்னையில் நடந்த ஆட்டங்களில் சென்னையைச் சேர்ந்த அம்பயரை களத்தில் இறங்குகிறார் என்பதை நான் உணர்ந்தேன்.அது எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. அதைத் தான் நான் பிக்சிங் என்று கூறினேன். அதனால் நான் அவற்றை அம்பலப்படுத்த முயன்றபோது, அவர் எனக்கு முற்றிலும் எதிராகச் சென்றார்.
அதையெல்லாம் விடுங்க, ஏலத்தில் சீனிவாசனுக்கு இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப்பை வாங்கிக் கொடுத்தேன். ஆம், நாங்கள் செய்தோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஒவ்வொரு அணியும் அதைப் பற்றி அறிந்திருந்தது. ஐபிஎல் போட்டியை சீனிவாசன் அனுமதிக்கப் போவதில்லை. அவர் எங்கள் புதரில் முள்ளாக இருந்தார். ஆம், [ஆண்ட்ரூ] பிளின்டாப்பை ஏலம் எடுக்க வேண்டாம் என்று எல்லோரிடமும் சொன்னோம்.
ஆம், சீனிவாசன் எனக்கு பிளின்டாஃப் வேண்டும் என்று சொன்னதால் செய்தேன். ஆனால் நீங்கள் ஐபிஎல் போன்ற ஒரு நிகழ்வை செய்ய முயற்சிக்கும் போது, நான் அதை தனியாளாக செய்தேன், விளையாட்டிற்கு பெரியது என்ன என்பதை நீங்கள் ஒவ்வொரு முள்ளையும் அகற்ற வேண்டும். ஒவ்வொரு வீரரும் மூன்று மாதங்கள் மட்டுமே அணியுடன் இருப்பார்கள்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“