Advertisment

டி20 போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி, 11 கால்பந்து வீரர்களுக்கு கொரோனா; லேட்டஸ்ட் விளையாட்டு செய்திகள்

இந்தியா-மே.இ.தீவுகள் இடையே, டி20 போட்டிகள் போட்டிகளை காண மேற்கு வங்க அரசு அனுமதி

author-image
WebDesk
New Update
டி20 போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி, 11 கால்பந்து வீரர்களுக்கு கொரோனா; லேட்டஸ்ட் விளையாட்டு செய்திகள்

விளையாட்டுச் செய்திகள் லேட்டஸ்ட் அப்டேட்கள்…

Advertisment

இந்தியா-மே.இ.தீவுகள் டி-20 : ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி

இந்தியா-மே.இ.தீவுகள் இடையே 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் ஒரு நாள் தொடரும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 20 ஓவர் தொடரும் நடைபெற உள்ளது. ஒரு நாள் தொடர் வரும் 6-ஆம் தேதியும், 20 ஓவர் தொடர் 16-ஆம் தொடங்குகிறது.

இந்நிலையில் அனைத்து உள் அரங்க விளையாட்டு மற்றும் வெளிப்புற விளையாட்டுகளைக் காண 75 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா  பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் மேற்கு வங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததற்கு பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அபிஷேக் டால்மியா அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘’கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றிகரமாக நடத்தியது போல் இந்த முறையும் மே.இ.தீவுகள் தொடரை நடத்திக் காட்டுவோம்’’ என்றார்.

இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 63,000 பேர் வரை அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். கட்டுப்பாடுகள் காரணமாக 50,000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருமையாக கேட்ச் பிடித்த தென்னாப்பிரிக்க வீரர்-பாராட்டிய ஐசிசி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மே.இ.தீவுகளில் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்கா- இலங்கை இடையே நடந்த முதல் அரையிறுதியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

எனினும், இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க இளம் வீரர் சைம்லேன் பிடித்த கேட்ச் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை  அணியின் வீரர் சகுணா லியனகே பந்தை அடிக்க முயன்றபோது பேட்டின் நுனியில் பந்து பட்டு ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த சைம்லேன் தலைக்கு மேலே சென்றது. இருப்பினும் லாவகமாக இடது கையை உயர்த்தி எகிறி குதித்து அந்த கேட்சை சைம்லேன் பிடித்தார்.

கஷ்டமான கேட்சை பிடித்த அவரை சக வீரர்கள் கட்டி அணைத்து வாழ்த்தினர். இந்நிலையில், அவர் கேட்ச் பிடித்த காணொலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்தப் போட்டியின் சிறந்த கேட்ச் இதுவாக இருக்குமோ? என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.

இது தென்னாப்பிரிக்க அணியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆட்டத்தில் இலங்கை வென்ற போதிலும் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங்கை ரசிகர்கள் வெகுமாக பாராட்டி வருகின்றனர். 

பிரிமீயர் லீக்: கால்பந்து வீரர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து தொடரான பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்று வரும் வீரர்கள் உள்பட ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தகவல் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிரீமியர் லீக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வீரர்கள், ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இப்போது போட்டிக்கு தற்காலிக இடைவேளை கொடுக்கப்பட்டுள்ளதால் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியவில்லை. போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வீரர்களும், ஊழியர்களும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 5-ம் தேதி பிரீமியர் லீக் போட்டி மீண்டும் தொடங்குகிறது.

போட்டி பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி அணி 18 வெற்றிகளுடன் முதலிடத்திலும், லிவர்பூல் அணி 14 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸுக்கு திரும்பும் பிரபல வீரர்

அமெரிக்க ஓபன் (2009) சாம்பியனும், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடம் வகித்தவருமான அர்ஜென்டீனா வீரர் ஜுவான் மார்ட்டின் டெல் பெட்ரோ (33) காயம் காரணமாக ஓய்வில் இருந்தார்.

கிட்டத்தட்ட 30 மாதங்களுக்கு பிறகு தற்போது அவர் டென்னிஸுக்கு திரும்பியுள்ளார்.

முழங்கால் காயம் காரணமாக 4 அறுவை சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டது. தற்போது பூரண குணமடைந்த காரணத்தால் மீண்டும் டென்னிஸ் மைதானத்துக்குள் நுழைய அவர் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அர்ஜென்டீனா ஓபன் மற்றும் ரியோ ஓபன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் நேரடியாக கலந்து கொள்ள அவருக்கு ‘வைல்டுகார்டு’ சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஃபார்முலா ஒன் நடத்த அனுமதி பெற்ற ஆசிய நாடு

அடுத்த ஏழு ஆண்டுகள் இரவு நேர ஃபார்முலா ஒன் பந்தயத்தை நடத்துவதற்கு ஆசியா நாடான சிங்கப்பூர் அனுமதி பெற்றது.

இதுகுறித்து பந்தய ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘2022 முதல் 2028 வரை ஏழு ஆண்டுகள் இரவு நேர ஃபார்முலா ஒன் பந்தயத்தை சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தனர்.

சர்வதேச சுற்றுலா பயணிகள் ஃபார்முலா ஒன் பந்தயத்தை ரசிக்க அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008 முதல் 12 முறை இரவு நேர ஃபார்முலா ஒன் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது.

2019 இல் மட்டும் 2,68,000 பேர் இப்போட்டியை கண்டு ரசித்தனர்.

கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 இல் போட்டி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Tennis Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment