கூடைப்பந்து உலகில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் அமெரிக்காவின் லெப்ரான் ஜேம்ஸ். 39 வயதான அவர் தற்போது என்.பி.ஏ (தேசிய கூடைப்பந்து சங்கம்) தொடருக்கான லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக களமாடி வருகிறார். தனது 18 வயதில் என்.பி.ஏ தொடரில் அடியெடுத்து வைத்த அவர் ஏராளமான சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
லெப்ரான் ஜேம்ஸ் என்.பி.ஏ லீக் வரலாற்றில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியிருக்கும் அவர் 20 முறை ஆல்-ஸ்டார் கோப்பையை வென்றுள்ளார். இன்னும் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர் தற்போதுல், தனது மகனையும் கூடைப்பந்து ஆட்டத்தில் களமிறங்கியுள்ளார். 20 வயதான அவரது மகன் ப்ரோனி லெப்ரான் ஜேம்ஸ் ஆடி வரும் அதே லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது தந்தை - மகன் இருவரும் என்.பி.ஏ தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மினசோட்டா டிம்பர்வொல்வ்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஆடினர். இதன் மூலம் என்.பி.ஏ தொடர் வரலாற்றில் ஒரே அணிக்காக விளையாடிய தந்தை - மகன் என்கிற சாதனையை லெப்ரான் ஜேம்ஸ் - ப்ரோனி படைத்துள்ளனர்.
லெப்ரான் ஜேம்ஸ் இந்தப் போட்டியில் 13 நிமிடங்கள் ஆடினார். மகனுடன் சேர்ந்து ஆடி, தனது மகிழ்ச்சியான இந்த தருணத்தை சொந்த மைதான ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். முன்னதாக, இந்தப் போட்டி தொடங்கும் போது லெப்ரான் ஜேம்ஸ் - ப்ரோனி ஆகிய இருவரும் களம் புகும் முன் ரசிகர்கள் எழுந்து நின்று தங்களது மரியாதை செலுத்து ஆரவாரமான கரகோஷத்தை எழுப்பினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“