இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் ஒன்று, முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வை ஏறக்குறைய ரசிகர்கள் மத்தியில் உறுதி செய்தது. இந்தியாவில் கடந்த 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை டி20 காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், தோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப் பெறச் செய்தனர்.
அந்த தருணங்களை நினைவு கூர்ந்த விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் "அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். தோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்" என பதிவிட்டிருந்தார்.
இதனால், தோனி ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே அமேசான் தீயாய் பரவ, தோனியின் மனைவில் சாக்ஷி, "இவை வெறும் வதந்தியே" என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டி20 தொடர் நாளை(செப்.15) தரம்சாலாவில் தொடங்கவுள்ள சூழலில், கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கோலி, "என் மனதில் எதுவும் இல்லை. நான் வீட்டில் உட்கார்ந்து, சாதாரணமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டேன். அது ஒரு செய்தியாக மாறிவிட்டது.
இது எனக்கு ஒரு பாடம் என்று நான் நினைக்கிறேன். நான் அந்த புகைப்படத்தை என்ன நினைத்து பதிவிட்டேனோ, உலகம் அப்படி நினைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
நான் எழுதியது போல, அந்த ஆட்டத்தை நான் இப்போதும் கூட நினைவில் வைத்திருக்கிறேன். நான் அந்த விளையாட்டைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை, அதனால் ட்வீட் செய்யலாம் என நினைத்தேன். இப்போது மக்கள் அதை வேறு விதமாக எடுத்துக் கொண்டனர். அதில் ஒன்று கூட உண்மையில்லை.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிக்கான திட்டத்தில் தோனி இருக்கிறாரா என்பது குறித்து பேசிய கோலி, "இன்னமும் தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவெனில், இந்திய கிரிக்கெட்டை பற்றி நினைத்துக் கொண்டிருப்பது தான். அணி நிர்வாகம் என்ன நினைக்கிறதோ, அவரும் அதே சிந்தனையை பிரதிபலிக்கிறார். இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை உருவாக்க நினைக்கும் அதே மனிதராக தோனி இன்னமும் இருக்கிறார்.
தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலவித சாதனைகளை படைத்துள்ளார். ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. இது தொடர்பாக யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்க வேண்டாம்" என்று முடித்துக் கொண்டார் கேப்டன் கோலி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.