IPL 2024 | Lucknow Super Giants | Delhi Capitals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் தொடங்கிய 26-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs DC Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லன்னோ அணிக்கு கேப்டன் ராகுல் – டீகாக் ஆகியோர் சுமாரான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்தபோது, டீகாக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படிக்கல் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 8 ரன்களுக்கும், பூரன் ரன் கணக்கை தொடங்காமலும், தீபக் ஷூடா 10 ரன்களுக்கும், வெளியேறிய நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய கேப்டன் ராகுல், 22 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் ஆயுஷ் பதோனி – அர்ஷித் கான் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. அரைசதம் கடந்த பதோனி 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 55 ரன்களும், அர்ஷித் கான் 16 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கலீல் அகமது 2 விக்கெட்டுகளும், இஷாந்த், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.’
தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டேவிட் வார்னர், 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த மெக்குரிக் அதிரடியாக விளையாடி அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ப்ரித்விஷா 22 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் மெக்குரிக்டன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய மெக்குரிக், 35 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து டெல்லி அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி அணியின் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“