10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 26-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs GT LIVE Cricket Score, IPL 2025
டாஸ் வென்ற லக்னோ பவுலிங் - குஜராத் முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் போடுவதாக அறிவித்தது. அதனால், குஜராத் அணி முதலில் பேட்டிங் ஆடியது. குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய சாய் சுதர்சன் - கேப்டன் சுப்மன் கில் ஜோடி தங்களது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்த ஜோடியை உடைக்க லக்னோ பவுலர்கள் போராடினார்கள். 12 ஓவர்களுக்குப் பின், 12.1-வது ஓவரில் லக்னோவின் அவேஷ் கான், கேப்டன் கில் விக்கெட்டை வீழ்த்தி தொடக்க ஜோடியை உடைத்தார். தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்திருந்த கில், 60 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்த ஓவரை வீசிய முதல் பந்தில் அரைசதம் அடித்து 56 ரன்கள் எடுத்த சாய் விக்கெட்டை கைப்பற்றினார். அத்துடன் நின்று விடாமல், அந்த ஓவரின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர்விக்கெட்டை வீழ்த்தினார். 2 பவுண்டரியை விரட்டி களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் 16 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு களத்தில் இருந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - ஷாருக் கான் ஜோடியில், 3 பவுண்டரியை விரட்டி 22 ரன்னில் ரூதர்ஃபோர்ட் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ராகுல் தெவாடியா டக் -அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் இருந்த ஷாருக் கான் 11 ரன்களும், ரஷித் கான் 4 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதனால், லக்னோ அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
லக்னோ பேட்டிங்
லக்னோவின் தொடக்க வீரர்களான எய்டன் மார்க்ரம் - நிக்கோலஸ் பூரன் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றினர்.
அந்த வகையில், லக்னோ அணி 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய எய்டன் மார்க்ரம், 26 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். எனினும், அடுத்த சில நிமிடங்களில் ப்ரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஆட்டமிழந்து அவர் பெவிலியன் திரும்பினார். அந்த வகையில், 31 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்ஸர் என 58 பந்துகள் எடுத்திருந்தார்
மறுபுறம், தனது அதிரடி ஆட்டம் மூலம் நிக்கோலஸ் பூரன், ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். இதனிடையே, அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, பூரனுடன் ஆயுஷ் படோனி கரம் கோர்த்தார். இவர்கள் இருவரும் அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினர். இதில், 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசிய பூரன், 61 ரன்களில் ரஷித் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருந்த போதிலும், 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 186 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், ரவி பிஷ்னாய்.