10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 16-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs MI LIVE Cricket Score, IPL 2025
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆடியது. முன்னதாக இன்று நடைபெற்ற போட்டியில், ரோகித் ஷர்மா விளையாட மாட்டார் என்று மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் ஷர்மா விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, லக்னோ அணியில் இருந்து மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்களில் அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ், 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து விக்னேஷ் புதூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும், ஐடன் மார்க்ரம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். மற்றொரு புறம், களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 12 ரன்களிலும், ரிஷப் பண்ட் 2 ரன்களிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். எனினும், ஆயுஷ் படோனி தனது பங்கிற்கு 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்தார்.
ஐடன் மார்க்ரம், 38 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இதன் பின்னர், டேவிட் மில்லர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் மொத்த ரன்களை கணிசமான அளவு உயர்த்தினார். ஆனால், அடுத்ததாக இறங்கிய அப்துல் சமத் 4 ரன்களிலும், ஆகாஷ் தீப் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணியில் இருந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்திக் பாண்டியா அசத்தினார். டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார் மற்றும் விக்னேஷ் புதூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை லக்னோ அணி குவித்தது.
அதன்படி, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வில் ஜாக்ஸ் மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவரும் முறையே 5 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், அடுத்ததாக களமிறங்கிய நமன் திர், சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடி காட்டினார்.
குறிப்பாக, இருவரும் சேர்ந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டனர். இதில் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசிய நமன் திர்ரின் விக்கெட்டை திக்வேஷ் சிங் வீழ்த்தினார். மற்றொரு புறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவும், 67 ரன்கள் எடுத்த நிலையில், தனது விக்கெட்டை அவேஷ் கானிடம் கொடுத்தார்.
அடுத்ததாக வந்த திலக் வர்மா 25 ரன்களில் ரிட்டையர்ட் அவுட்டாகி சென்றார். இறுதியாக, அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஹர்திக் பாண்டியா போராடினார். அவர் தனது பங்கிற்கு 16 பந்துகளில், 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்தார். மிட்செல் சான்ட்னர் இரண்டு ரன்கள் எடுத்தார்.
எனினும், மும்பை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் சிங் ரதி, ஆகாஷ் தீப், அவேஷ் கான்.
மும்பை இந்தியன்ஸ்: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார், தீபக் சாஹர், விக்னேஷ் புதூர்.