MI vs LSG IPL 2023 Eliminator Match: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றிரவு (புதன்கிழமை) 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் அணி அகமதாபாத்தில் 26-ந் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் குஜராத்தை எதிர்த்து விளையாடும். தோல்வி காணும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு; லக்னோ பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், லக்னோ அணி பவுலிங் செய்யும்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, பிரேரக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா (கேப்டன்), கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான்
மும்பை பேட்டிங்
மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா களமிறங்கினார். ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிரீன் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிய இஷான் கிஷன் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூரியகுமார் அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் பொறுமையாக கம்பெனி கொடுக்க, சிறப்பாக விளையாடி வந்த கிரீன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 104 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த டிம் டேவிட் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வதேரா களமிறங்கிய சிறிது நேரத்தில் திலக் 26 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோர்டன் 4 ரன்களில் அவுட் ஆனார். ஹிரித்திக் களமிறங்கிய நிலையில், வதேரா கடைசி பந்தில் 23 ரன்களில் அவுட் ஆக மும்பை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்களையும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்களையும், மோசின் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
லக்னோ பேட்டிங்
லக்னோ அணியில் மேயர்ஸ் மற்றும் மன்கட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மன்கட் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக க்ருணால் பாண்டியா களமிறங்கிய சிறிது நேரத்திலே மேயர்ஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆட லக்னோ அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால் மறுமுனையில் ஆடிய பாண்டியா 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய படோனி 1 ரன்னில் அவுட் ஆக, பூரன் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸூக்கு கம்பெனி கொடுத்தார். சிறப்பாக ஆடிய ஸ்டாய்னிஸ் 40 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய கௌதம் 2 ரன்களிலும், பிஷ்னோய் 3 ரன்களிலும் அவுட் ஆகினர். நவீன் களமிறங்கிய நிலையில் மறுமுனையில் ஆடிய தீபக் ஹூடா 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மோசின் கான் டக் அவுட் ஆக லக்னோ அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லக்னோ அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. மும்பை அணியில் ஆகாஷ் 5 விக்கெட்களையும் ஜோர்டன், சாவ்லா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மும்பை அணி குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. குவாலிஃபயரில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.