Lyca Kovai Kings vs Nellai Royal Kings Tamil News: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 7வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கோவையில் இன்று இரவு நடைபெறும் 6வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் சச்சின் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 24 பந்துகளில் 33 ரன்கள் குவித்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
சாய் சுதர்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராம் அரவிந்த்18 ரன்களிலும், ஷாருக்கான் 17 ரன்களிலும், ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்துள்ளது.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய முகிலேஷ் 5 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 15 ரன்கள் குவித்தார். நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியில், கேப்டன் அருண் கார்த்திக் டக் அவுட் ஆனாலும், நிரஞ்சன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அஜித்தேஷ் குருசாமி அதிரடியாக விளையாடி அசத்தினார்.
ஆனால் மறுமுனையில் ஈஸ்வரன் 3, சோனு யாதல் 20, அருண்குமார் 3 ஆகியோர் விரைவில் வெளியேறினாலும்,அதிரடியை தொடர்ந்து அஜித்தேஷ் குருசாமி சதமடித்து அசத்தினார். 60 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி 8 சிக்சருடன் 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்பு 182 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil