Madurai News in Tamil: மதுரையில் இன்று காலை இரத்ததான விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய போட்டிைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளை சேர்ந்த 4500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொறியியல் கல்லூரியை சேர்ந்த 160 மாணவ-மாணவிகளும் இதில் அடங்குவர். அந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரின் மகன் தினேஷ்குமார் என்பவர் 4 -ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரும் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
போட்டியில் பங்கேற்று விட்டு கல்லூரி விடுதிக்கு வந்த தினேஷ்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சுய நினைவு இழந்து காணப்பட்ட தினேஷ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
'மராத்தான் முடிந்து 1 மணி நேரம் கழித்து மாணவர் தினேஷ் குமாருக்கு வலிப்பு ஏற்படவே, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மிகக்குறைவாக இருந்தது. சுய நினைவு திரும்பவே இல்லை. காலை 10.10 மணிக்கு திடீர் இதய அடைப்பு ஏற்பட்டு, 10.45 மணிக்கு உயிர் பிரிந்தது' என்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil