தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கவுள்ள டி20 தொடரிலும் தோனி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பை முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு மாதங்கள் ராணுவத்துடன் இணைந்து நேரம் செலவழிக்க உள்ளதால், தோனி இத்தொடரில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றியிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியிலும் வென்ற இந்தியா, அடுத்ததாக வரும் 30ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில், முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மொஹாலியிலும் (செப் 18) மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (செப் 22)ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 4ம் தேதி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிடிஐக்கு பேட்டி அளித்த மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், "2020ல் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா இன்னும் 22 டி20 போட்டிகளே ஆடவிருக்கிறது. ஆகையால், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவது என்பதில் தேர்வாளர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். டி20 உட்பட குறுகிய ஓவர் கிரிக்கெட்டுக்கு மூன்று விக்கெட் கீப்பர்களை தயார் செய்வதே அவர்கள் முடிவு." என்றார்.
தோனி குறித்து பேசிய அந்த அதிகாரி, "ஓய்வு என்பது தனிப்பட்ட ஒருவரின் முடிவு. இதில், தேர்வுக் குழுவில் இருக்கும் யாரும் முடிவெடுக்க முடியாது. ஆனால், 2020 டி20 உலகக் கோப்பைக்கான வழிப் பாதையை தேர்வு செய்ய அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. அதன்படி, ரிஷப் பண்ட்டுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட உள்ளார்கள்" என்றார்.
மேலும், இரண்டாவது ஆப்ஷனாக சஞ்சு சாம்சனையும், மூன்றாவது ஆப்ஷனாக இஷான் கிஷனையும் தேர்வுக் குழுவினர் யோசித்து வைத்துள்ளனர். இருப்பினும், ரிஷப் பண்ட் தான் அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் முதல் சாய்ஸாக கருத்தில் கொள்ளப்படுவார் என்றார்.