Virat Kohli | Manimaran Siddharth | Lucknow Super Giants | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பெங்களூருவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குயின்டன் டி காக் 81 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு 19.4-வது ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 153 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த், யஷ் தாக்கூர் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கோலியை வெளியேற்றிய தமிழக ஸ்பின்னர்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் லக்னோ அணியில் களமாடி வரும் தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த், தனது முதல் ஐ.பி.எல் போட்டியிலே பெங்களூருவின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய அசத்தியுள்ளார். சித்தார்த் போட்டியில் 4வது ஓவரை வீசிய நிலையில், அவரது முதல் பந்தில் கோலி ஆஃப்-சைடில் பவுண்டரி விளாசி அவரை வரவேற்றார். சற்று பதட்டமானாலும் தனது நம்பிக்கையை இழக்காத அவர் அடுத்த பந்தில் வேகத்தைக் குறைத்து ஃபுல்லர் டெலிவரியாக வீசினார்.
அதனை விரட்ட கோலி இறங்கி வர, பந்து டர்ன் ஆகி அவரது பேட்டில் எட்ச் அடித்து பேக்வேர்டு பாயிண்டிற்கு சென்றது. அப்போது அங்கு பீல்டிங் செய்த தேவ்தத் படிக்கல் அற்புதமான கேட்ச்சை எடுத்தார். ஒரு சிக்ஸர் 2 பவுண்டரியை விரட்டிய கோலி 22 ரன்னுக்கு அவுட் ஆகி நடையைக் கட்டினார். இந்நிலையில், கோலி எனும் மாவீரனை ஆட்டமிழக்க செய்த இந்த சித்தார்த் யார்? என்று தற்போது ரசிகர்கள் கூகுள் தேடு பொறியைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அவ்வகையில், மணிமாறன் சித்தார்த் பின்னணி குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
யார் இந்த மணிமாறன் சித்தார்த்?
தனது குழந்தைப் பருவத்தை இந்தோனேசியாவில் செலவழித்த மணிமாறன் சித்தார்த், 8 வயதில் தாயகம் திரும்பியுள்ளார். கிளப் கிரிக்கெட் வீரரின் மகனான அவர் தனது கிரிக்கெட் கனவுகளைத் துரத்த தொடங்கினார். ஆரம்பத்தில் சித்தார்த் இர்பான் பதானைப் போல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருக்க விரும்பியுள்ளார். பிறகு இடது கை சுழற்பந்து பந்துவீச்சாளராக முடிவு செய்துள்ளார்.
உள்நாட்டு அறிமுகம்
2019 ஆம் ஆண்டில், சித்தார்த் சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாட்டிற்காக டி20 அணியில் அறிமுகமானார். அந்த சீசனில் 12 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் அவரை பவர்பிளேயில் பந்துவீச பரிந்துரைத்த தினேஷ் கார்த்திக், அவரது ரோலை முற்றிலும் மாற்றினார்.
அதே ஆண்டில் அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல்தர போட்டியில் அறிமுகமானார் சித்தார்த். இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 நான்கு விக்கெட்டுகள் உட்பட 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து 2021ல் தமிழக அணிக்காக சித்தார்த் தனது முதல் லிஸ்ட் ஏ போட்டியில் ஆடினார். அவர் 17 50 ஓவர் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2020 ஐ.பி.எல் சீசனுக்கு முன்னதாக நடந்த ஏலத்தில் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸால் வாங்கியது. பின்னர், 2021 இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு காயம் ஏற்படவே, அவரது ஐ.பி.எல் பயணம் நின்று போனது. அதிலிருந்து மீண்டு வந்த சித்தார்த் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) சிறப்பாக விளையாடியதன் மூலம், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த ஆண்டு லைகா கோவை கிங்ஸ் அணிக்காக களமாடி 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை அவர் 5.61 என்ற நல்ல எக்கனாமியில் விகிதத்தில் எடுத்தார்.
கடந்த இறுதியில் துபாயில் நடந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் அவர் பெயர் அறிவிக்கப்பட்ட போது, அவரை வாங்க லக்னோ கோதாவில் குதித்தது. ஆர்.சி.பி-யும் போட்டிக்கு வர, அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்கி, லக்னோ ரூ.2.4 கோடிக்கு அவரை ஒப்பந்தம் செய்தது. தற்போது அணிக்காக நடப்பு சீசனில் சுழல் வித்தையை காட்டி வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியின் அதிகம் கவனிக்கப்படும் வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.