பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்களை இந்தியா வென்றது. மேலும், பதக்க அட்டவணையில் 71-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா வென்ற 5 வெண்கலப் பதக்கங்களில் 2 பதக்கத்தை தனதாக்கி இருந்தார் பதக்க மங்கை மனு பாக்கர்.
அவர் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில் 3-வது இடம் பிடித்த அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல், கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பெயர் இல்லை
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர், இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கேல் ரத்னா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெறவில்லை. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்திய அரசு விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் கவுரவிப்பதற்கும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை வழங்கி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு விருது பெற தகுதியுடைய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவுக்காக பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர் இல்லை. இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இல்லை என்பதற்கான காரணமாக, அவர் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறினர். இருப்பினும், மனுவின் குடும்பத்தினர், அவர் உண்மையிலேயே தனது விண்ணப்பத்தை அனுப்பியதாக கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதயம் நொறுங்கிய மனு பாக்கர்
இது தொடர்பாக மனுவின் தந்தை ராம் கிஷன் பாக்கர் பேசுகையில், "அவரது (மனு பாக்கர்) முயற்சியை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். நான் மனுவிடம் பேசினேன், அவர் இதையெல்லாம் கண்டு மனம் உடைந்தார். அவர் என்னிடம், 'நான் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டிற்காக பதக்கங்களை வென்றிருக்கக் கூடாது. உண்மையில், நான் விளையாட்டு வீராகனையாகவே மாறி இருந்திருக்கக்கூடாது என்று சொன்னாள்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் தவிர, மனு பாக்கரின் சாதனைகள் தனித்து நிற்கிறது. அவர் டோக்கியோ மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இடையில், துப்பாக்கி சுடும் உலக சாம்பியன்ஷிப், துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை, 2023 ஆசிய விளையாட்டுகள் மற்றும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் உட்பட பல துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் 17 தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை மனு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.