ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் பிரிவில், இந்தியாவின் மனு பேகர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
சிட்னியில் இன்று நடைபெற்ற தனிநபர் 10மீ துப்பாக்கிச் சுடும் பிரிவில் மனு பேகர், மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். தாய்லாந்தின் கான்யகோர்ன் ஹிரும்போம்-க்கும் மனுவுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இதில் கடைசி ஷாட்டில், துல்லியமாக செயல்பட்ட மனு பேகர், தங்கப் பதக்கத்தை நூலிழையில் தட்டிச் சென்றார்.
மனு பேகர், தொடர்ந்து ஆறு சுற்றில் 10வது ரிங்கிற்கு வெளியே சுட்டதால், ஒரு புள்ளி கான்யகோர்னை விட பின் தங்கி இருந்தார். இன்னும் இரண்டே ஷாட்கள் மட்டுமே மீதமிருந்தது. ஆனால், அதில் மிகத் துல்லியமாக செயல்பட்ட மனு, இறுதியில் தங்கத்தை தன்வசமாக்கினார்.
மனு 235.9 புள்ளிகள் பெற்று தங்கம் வெல்ல, கான்யகோர்ன் 234.9 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் லு கைமான் 214.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். தகுதிச் சுற்றில் கான்யகோர்ன் 576 புள்ளிகள் வென்று புதிய உலக சாதனையே படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, ஆண்கள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் கெளரவ் ராணா வெளிப்பதக்கத்தையும், அன்மோல் ஜெயின் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக, 12 பதக்கங்களுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 14 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும் உள்ளன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Manu bhaker secures 10m air pistol gold medal on last shot at issf junior world cup