பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்களை இந்தியா வென்றது. மேலும், பதக்க அட்டவணையில் 71-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா வென்ற 5 வெண்கலப் பதக்கங்களில் 2 பதக்கத்தை தனதாக்கி இருந்தார் பதக்க மங்கை மனு பாக்கர்.
அவர் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில் 3-வது இடம் பிடித்த அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல், கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பெயர் இல்லை
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர், இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கேல் ரத்னா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெறவில்லை. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்திய அரசு விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் கவுரவிப்பதற்கும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை வழங்கி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு விருது பெற தகுதியுடைய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவுக்காக பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர் இல்லை.
இந்தப் பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இல்லை.
காரணம் என்ன?
இந்நிலையில், மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இல்லை என்பதற்கான காரணமாக, அவர் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், மனுவின் குடும்பத்தினர், அவர் உண்மையிலேயே தனது விண்ணப்பத்தை அனுப்பியதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தடகள வீரர் விருதுக்கு பதிவு செய்யவில்லை என்றால், விளையாட்டு வீரரின் சாதனைகளைப் பொறுத்து தேர்வுக் குழு சுயமாக முடிவு எடுக்கலாம். முன்பு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால், பி.சி.சி.ஐ-யின் வேண்டுகோளின் பேரில் அவர் பரிந்துரைக்கப்பட்டார். ஷமிக்கு, தேசிய விளையாட்டு தின விருதுகள் குழு தானாக முன்வந்து வழங்க முடிவு செய்தது.
இதைத் தவிர, காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேல் ரத்னா விருதை வழங்குமாறு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தினார்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின், கடந்த வாரம் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“