விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது நான்கு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. செஸ் உலக சாம்பியன் குகேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
புறக்கணிப்பு
இதற்கிடையில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இல்லை எனவும், அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டதாகவும் கடந்த வாரத்தில் தகவல் வெளியாகியது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்ட பெரும் சர்ச்சையாகியது. ஒருபுறம், மனு பாக்கர் கேல் ரத்னா விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறினர். மறுபுறம், மனுவின் குடும்பத்தினர், அவர் உண்மையிலேயே தனது விண்ணப்பத்தை அனுப்பியதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக பேசிய மனுவின் தந்தை ராம் கிஷன் பாக்கர், "அவரது (மனு பாக்கர்) முயற்சியை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். நான் மனுவிடம் பேசினேன், அவர் இதையெல்லாம் கண்டு மனம் உடைந்தார். அவர் என்னிடம், 'நான் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டிற்காக பதக்கங்களை வென்றிருக்கக் கூடாது. உண்மையில், நான் விளையாட்டு வீராகனையாகவே மாறி இருந்திருக்கக்கூடாது என்று சொன்னாள்." என்று கூறியிருந்தார். இந்த சூழலில் தான், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது
இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகி கவுரவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.