டோக்கியோ பாராலிம்பிக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயரம் தாண்டுதல் T42 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நடப்பு சாம்பியனான மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஷரத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், கடந்த ரியோ 2016 பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது, அவருடன் போட்டியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த அதே கிரீவ் இந்தமுறை டோக்கியோ பாராலிம்பிக்கில் தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் T42 பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கிரீவ்க்கும் இந்திய வீரர் மாரியப்பனுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது. அமெரிக்க வீரர் கிரீவ் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இவரையடுத்து, மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு தடகள வீரரான மாரியப்பன், 5 வயதாக இருந்தபோது பேருந்தின் கீழ் அவருடைய வலது கால் நசுக்கப்பட்டதால் மாற்றுத் திறனாளியானார். அவரது தந்தை குடும்பத்தை கைவிட்ட பிறகு அவருடைய தாயாரால் வளர்க்கப்பட்டார். மாரியப்பன் தனது தாயார் காயகறி விற்பனையாளராக மாறுவதற்கு முன்பு கூலி வேலை செய்தபோது மோசமான வறுமையை எதிர்கொண்டு வளர்ந்தார்.
மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து அவருடைய சகோதரர் கோபி கூறுகையில், தனது சகோதரர் 6 மாதம் வீட்டுக்கு வராமல் தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தண்டுதலில் T42 பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் ஷரத் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த ஷரத் குமார், இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது போலியோ தடுப்பூசி போடப்படதாததால் அவரது இடது காலில் பக்கவாதம் ஏற்பட்டது. இவர் இரண்டு முறை ஆசிய பாரா விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவர்.
இருப்பினும், இதில் மற்றொரு இந்திய வீரர் வருண் பாட்டி ஏமாற்றம் அளித்தார். அவருடைய மூன்று முயற்சிகளில் 1.80 மீட்டர் உயரம் தாண்டி ஒன்பது போட்டியாளர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
T42 பிரிவு என்பது கால் பற்றாக்குறை, கால் நீளம் வேறுபாடு, பலவீனமான தசை சக்தி அல்லது கால்களில் செயலற்ற தன்மை கொண்ட விளையாட்டு வீரர்களுக்கானது. இதில் தடகள விளையாட்டு வீரர்கள் நிற்கும் நிலையில் போட்டியிடுகின்றனர். இந்தியா இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.