ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்றில், நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் வென்றுள்ளன.
துபாயில் நடந்த போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பாண்ட்யாவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த ரவீந்திர ஜடேஜா, 10 ஓவர்கள் வீசி, 29 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ் குமார், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தியாவின் ஸ்பின் ட்வின்ஸ் சாஹல், குல்தீப் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் 83 ரன்களும், தவான் 40 ரன்களும், தோனி 33 ரன்களும் எடுக்க, 36.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா வென்றது.
இதைத்தொடர்ந்து, பரிசளிப்பு நிகழ்வில் பேசிய வங்கதேச கேப்டன் மோர்டசா, "சரியான தொடக்கத்தை நாங்கள் ஏற்படுத்தவில்லை. இலங்கையுடனான லீக் போட்டியிலும் இதே தவறை தான் நாங்கள் செய்தோம். இப்போது மீண்டும் அது ரிப்பீட் ஆகிறது. 170 ரன்கள் டார்கெட் வைத்துவிட்டு, அதற்கு எதிரணியை வீழ்த்த வேண்டும் என்று பவுலர்களிடம் சொல்ல முடியாது. இது நல்ல பேட்டிங் பிட்ச். இதில் அடிக்காமல் விட்டது பேட்ஸ்மேன்களின் தவறு. இன்னமும் இந்த தொடரில் எங்களுக்கு வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம்" என்றார்.
அபுதாபியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான், 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்து போராடி வென்றது.