ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியின் வெற்றி குறித்துதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. அதற்கு காரணம் தொடக்கத்தில் சென்னை சந்தித்த சில சறுக்கல்கள். ஆனால் அவை அனைத்தும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த வெற்றி. அதை சாத்தியப்படுத்தியவர்களில் முக்கியமானவர் அம்பதி ராயுடு.
அவமானங்களை தூள் தூளாக்கிய அம்பதி!
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக அம்பதி மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய விமர்சனம், அவர் ஃபார்ம் அவுட் என்பதே. கடந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு, நல்ல ஃபார்மில் உலகக்கோப்பை டீமில் ராயுடு சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் இடம் பிடித்தார். அப்போது, விஜய் சங்கர் மூன்று நிலைகளிலும் விளையாடக்கூடிய வீரர் என்று அவரை தேர்வு செய்து ராயுடுவை புறந்தள்ளியது பிசிசிஐ. இந்த அவமானத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அதிரடியாக ஓய்வு அறிவித்தார். அன்றிலிருந்து நேற்று வரை அவர் எந்த அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டிகளிலும் களமிறங்கவில்லை.
இதை வைத்துதான் அவர்மீது ஃபார்ம் அவுட் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். முதல் போட்டியில், அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த இக்கட்டான தருணத்தில், பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நான்காவது வரிசை வீரராக களம் புகுந்தார். ராயுடு களமிறங்கிய போது, சென்னை அணி 6 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி, 2 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது நடந்துகொண்டிருப்பது இரண்டாவது ஓவரின் முடிவு. ஏற்கனவே ஆடுகளம் பந்துவீச்சு சாதகமானது. இதுபோதாதென்று, மும்பை அணிக்கு முதலில் பந்துவீசியவர்கள், ஜேம்ஸ் பேட்டின்சனும், டிரண்ட் போல்டும்.
ராயுடுவின் மறுமலர்ச்சி!
முதலில் மெதுவாக இன்னிங்ஸை தொடங்கிய, ராயுடு அடுத்து மெதுவாக வேகம் கூட்டம் ஆரம்பித்தார். 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தவர், ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார். 28 பந்துகளில் 45 ரன்களைக் குவித்தார். சிறிது நேரத்தில், ஐபிஎல் 2020 சீஸனின் முதல் அரை சதத்தை தன் கைகளால் அடித்து, தன்னை புறக்கணித்தது தவறு என்று நிரூபித்தார். ராயுடு தனது 26 வது டி 20 அரைசதத்தை பும்ராவின் ஓவரில் பவுண்டரி அடித்து சென்னைக்கு போன நம்பிக்கையை இழுத்து கொண்டு வந்தார் ராயுடு. மறுபுறம் களத்தில் இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ், ஒரு பெரிய சகோதரனைப் போல ராயுடுவுக்கு ஆதரவளித்தார். ராயுடுவுக்கு வாய்ப்பளித்து, இவர் சிங்கிள்களை தட்டினார். இருவரது பார்ட்னர்ஷிப்பும், 100 ஐ கடந்தது, சென்னை அணியின் வெற்றி உறுதியானது.
நம்பிக்கையை காத்த பியூஷ் சாவ்லா!
ராயுடுவை விட சென்னை ரசிகர்களாலேயே அதிகம் விமர்சிக்கப்பட்டவர் என்றால் அது பியூஷ் சாவ்லாதான். ஏற்கனவே, சென்னை அணி 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் அதிகமாக இருப்பதால் வயதான அணி என்ற விமர்சனத்தை சுமந்து வருகிறது. இந்த விமர்சனத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டவர், பியூஷ் சாவ்லா. அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல, 6.75 கோடிக்கு. ஹர்பஜன், ஜடேஜா, இமான் தாஹீர், கரண் ஷர்மா என சுழற்பந்து வீச்சுக்கு பெரும் பட்டாளமே இருக்கும் நிலையில், புதிதாக 31 வயதான பியூஷ் சாவ்லாவை இவ்வளவு கோடிக்கு ஏலம் எடுத்தது ஏன் என்று அப்போதில் இருந்து நேற்று வரை கேள்வி மேல் கேள்வி வந்துகொண்டிருந்தது.
ஆனால் ரிஸ்ட் லெக் ஸ்பின்னரான சாவ்லா வேண்டும் என்று விடாப்பிடியாக ஏலத்தில் எடுத்தார் தோனி. அவரின் நம்பிக்கையை நேற்றைய போட்டியில் காத்தார் சாவ்லா. நேற்று, ஓப்பனிங் இறங்கிய, டி காக் மற்றும் ரோஹித் ஆகியோர் பவர்ப்ளேயின் முதல் நான்கு ஓவர்களை துவம்சம் செய்துகொண்டு இருந்தனர்.
சென்னை அணியின் பந்துவீச்சை முதல் 4 ஓவர்களில் நாலாபுறமும் சிதறடித்தனர். அதனால் 4 ஓவரிலேயே 40 ரன்களை கடந்தது. அப்போதுதான் ஐந்தாவது ஓவரை தோனி சாவ்லாவின் கையில் கொடுத்தார். நினைத்தது போலவே முதல் ஓவரிலேயே அபாயகரமான ரோகித் சர்மாவை 12 ரன்களில் வெளியேற்றி தோனியின் நம்பிக்கையை காப்பாற்றினார். வழக்கமாக பவர்ப்ளேயில், இதுபோன்ற தருணங்களில் ஹர்பஜனிடம் பந்தை கொடுக்கும் தோனி, இந்த முறை ஹர்பஜனுக்கு பதில் சாவ்லா கையில் பந்தை கொடுத்தார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது.
தனது முதல் ஓவரில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித்தை 12 ரன்களில் வெளியேற்றி சென்னை அணிக்கு திருப்பத்தை கொடுத்தார் சாவ்லா. முதல் இரண்டு ஓவர்களில் சாவ்லா கொடுத்தது வெறும் 6 ரன்கள் மட்டுமே. அடுத்து மும்பை அணியின் வீரர் ஹர்டிக் பாண்டியா வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி வாண வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். அப்போதும் தோனி அழைத்தது சாவ்லாவைதான். அப்போது, ஒரு ஓவர் வீசி ஐந்து ரன் மட்டுமே கொடுத்தார். நேற்றைய போட்டியில் மொத்தம் 4 ஓவர்கள் முழுமையாக வீசிய அவர் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி தன்னுடைய தேர்வு சரி என்பதை நிரூபித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.