Chennai Super Kings | Mumbai Indians | IPL 2024 auction: 10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துபாயில் நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள். இவர்கள் மொத்தம் ரூ.230 கோடியே 45 லட்சத்திற்கு விற்கப்பட்டனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
ஜூனியர் மலிங்காவை வாங்கிய மும்பை
இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிரடியாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி இலங்கை வீரர் மலிங்காவை போன்ற அதே ஆக்சனில் பந்துவீசும் நூவன் துஷாராவை வாங்கியது. அவரை ஏலத்தில் எடுப்பதில் டெல்லி, லக்னோ அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தீவிரமாக களத்தில் குதித்த மும்பை அணி அவரை ரூ.4.80 கோடிக்கு வாங்கியது.
மும்பை அணி துஷாராவை வாங்குவதற்கு முக்கிய காரணம் இலங்கையின் அணியின் முன்னாள் கேப்டனும், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்த்தனே என்று பார்க்கப்படுகிறது. மலிங்காவிற்கு கீழ் துஷாராவை பட்டை தீட்ட முடியும் என்பதால், அவரை ஜூனியர் மலிங்காவாக பயன்படுத்த மும்பை அணி நிர்வாகம் திட்டம் வைத்துள்ளது.
ஏற்கனவே ஜூனியர் மலிங்கா என அழைக்கப்படும் மதீஷா பத்திரானாவை சென்னை அணி கைவசம் வைத்துள்ள நிலையில், அவருக்கு போட்டியாக துஷாராவை வாங்கியுள்ளது மும்பை. பத்திரானா கடந்த சீசனில் சென்னை அணி கோப்பை வென்றதில் முக்கியப் பங்கு வகித்திருந்தார். அதேபோல் துஷாராவை உருவாக்கி கோப்பை வெல்ல பகல் கனவு கண்டுள்ளது மும்பை. அந்தக் கனவு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அத்துடன் இளம் வேகப்பந்து வீச்சாளரான பத்திரானா எளிதில் 145 கி.மீ வேகத்திற்கும் அதிகமாக வீசும் திறமை கொண்டவர். ஆனால் துஷாரா 136 கி.மீ வேகத்தை கடக்கவே திணறி வருகிறார். அவரை வைத்து சென்னை அணிக்கு சவால் விடுக்குமா என்பதை பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.
இந்த ஏலத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, சென்னை அணியின் செல்லப் பிள்ளையான பத்திரானா, 'விசுவாசத்தை பணத்தால் வாங்க முடியாது' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனால் மும்பை அணி தரப்பில் அவரை நேரடியாக அணுகப்பட்டதாக ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“