Mayank Agarwal: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் ஏன் இந்த குழப்பம்? இது குழப்பம் தானா அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதும் ஸ்டிராடஜி உள்ளதா?
உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நான் ஸ்டாப் வெற்றிப் பயணத்துக்கு எண்டு கார்டு போட்டிருக்கிறது இங்கிலாந்து. தென்னாப்பிரிக்காவுடான முதல் போட்டியில் சேஸிங் செய்து வெற்றிப் பெற்ற இந்தியா, அதன்பிறகு நடந்த அனைத்துப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து, எதிரணியை டிஃபன்ட் செய்து வெற்றிப் பெற்று வந்தது.
இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு நேற்று மீண்டும் சேஸிங் வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, 306 ரன்களில் கட்டுப்பட்டது. அதுவும், 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து. தோனியும், கேதர் ஜாதவும் களத்தில் நிற்க.
இந்தச் சூழலில், உலகக் கோப்பைக்கான அணியில், அம்பதி ராயுடுவை கடும் போராட்டத்திற்கு மத்தியில் ஓவர் டேக் செய்து, '3D வீரர்' எனும் கேப்ஷனுடன் இந்திய அணியில் இடம் பிடித்த விஜய் ஷங்கர், மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கிடைத்தும், பெரிய அளவில் தனது திறமையை நிரூபிக்கத் தவறினார். இப்போது, கால் விரலில் ஏற்பட்டிருக்கும் லேசான முறிவு காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விஜய் ஷங்கர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - Sri Lanka vs West Indies Live Score: இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்
முன்னதாக, காயம் காரணமாக ஷிகர் தவான் வெளியேறிய நிலையில், இப்போது விஜய் ஷங்கரும் உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்படுகிறார்.
ஷிகர் தவான் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். அவர் காயம் அடைந்து வெளியேறிய போது, லோ ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணிக்கு அழைக்கப்பட்டார். லோகேஷ் ராகுல், பயிற்சிப் போட்டியில் மிடில் ஆர்டரில் இறங்கி வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்திருந்த நிலையிலும், தவானுக்கு பதிலாக ஓப்பனிங் இறக்கப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 78 பந்துகளில் 57 ரன்கள் அடித்த ராகுல், ஆப்கனுக்கு எதிராக 53 பந்துகளில் 30 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 0 ரன்களிலும் வெளியேறினார். அதுமட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் லோகேஷ் ராகுல் காயம் அடைந்திருக்கிறார்.
இந்நிலையில், விஜய் ஷங்கருக்கு பதிலாக தொடக்க வீரர் மாயங்க அகர்வால் அழைக்கப்பட்டிருக்கிறார். லோகேஷ் ராகுல் ரெக்கவர் ஆகவில்லை எனில், மாயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம். ஆனால், ராகுல் குணமடையும் பட்சத்தில், மாயங்க்கிற்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே!. அப்படியிருப்பின், விஜய் ஷங்கருக்கான மாற்று யார்? என்ன திட்டத்தில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் காயத்துக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனை இந்திய அணி நிர்வாகம் அழைத்திருக்கிறது? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
மாயங்க் அகர்வாலோடு ஒப்பிடுகையில், லோகேஷ் ராகுல் அதிக சர்வதேச போட்டிகள் ஆடிய அனுபவம் பெற்றவர். லோகேஷ் மீதான Exposure தான் அதிகமிருக்கும். அப்படி இருக்கையில், மாயங்க் அகர்வாலுக்கு ஓப்பனிங் ஆட எப்படி வாய்ப்பு வழங்கப்படும்? அதுவும் அரையிறுதி எனும் நாக் அவுட் நெருங்கி வரும் சூழலில்.
பென்ச்சில் உட்கார வைக்கத் தான் மாயங்க் அழைக்கப்பட்டிருக்கிறாரா? என்னங்க சார் உங்கள் திட்டம்?