Mayank Yadav | IPL 2024 | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடி வருபவர் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ். அவர் 8 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக ஐ.பி.எல் 2024 இன் வேகமான பந்தை மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் மயங்க் வீசினார். அந்த ஆட்டத்தில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மயங்க் யாதவ் ஹெல்த் அப்டேட்
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 ஓவர் வீசி 13 ரன் கொடுத்த மயங்க யாதவ் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு அடிவயிற்று பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், அதன் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், மயங்க் யாதவ் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், "கடைசி ஆட்டத்தில் மயங்க யாதவ் மேல் இடுப்பு பகுதியில் சிறிது இறுக்கத்தை உணர்ந்தார். ஆனால், அது அவருக்கு இருந்த பத்து வலிகளில் ஒரு வலியாக இருந்தது, மேலும் மருத்துவ அறிகுறிகள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம்.
டாக்டர்கள் மற்றும் பிசியோக்கள் சோதித்து பார்க்கையில் அவருக்கு எல்லாம் சரியாகத் தெரிந்தது. அவர் அந்த முதல் ஓவரை [குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக] வீசும் போது அவரது இடுப்பில் ஏதோ உணர ஆரம்பித்தார்.
அதனால், நாங்கள் ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தோம், அங்கு மிக மிக சிறிய வீக்கம் உள்ளது. எனவே அவர் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார், விரைவில் மீண்டும் பந்துவீசுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
அவர் அதை நோக்கி உழைத்துக்கொண்டிருப்பார்; நமது அடுத்த ஆட்டம் எதுவாக இருந்தாலும் அதற்குத் தயாராக இருப்பதற்கு அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். நாளைய போட்டியில் விளையாட மாட்டார்; அது சாத்தியமில்லை மிகக் குறுகிய காலத்தில், அவர் இந்த இரண்டு ஆட்டங்களில் விளையாடுவது சாத்தியமில்லை. ஆனால் அவர் நிச்சயமாக முடிந்த போதெல்லாம் விளையாடுவதற்கு உழைக்கிறார்." என்று அவர் கூறினார்.
லக்னோ அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை லக்னோவில் சந்திக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“