கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் வர்ணனையாளர்களின் பங்கும் அளப்பரியது. அதேபோல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், பின்பும், இடைவேளையின் போதும் ரசிகர்களை டிவியை பார்க்கவைப்பது போட்டி தொகுப்பாளர்களே. இவர்களே வர்ணனையாளர்களையும், வீரர்களையும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பேசவைத்து ரசிகர்களை எங்கும் செல்லவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அந்தவகையில் ஐபிஎல், ஐசிஎல் உட்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர்களில் ஒருவர் மயாந்தி லாங்கர்.
மாயந்தி பல ஆண்டுகளாக இந்திய விளையாட்டு ஒளிபரப்பில் மிக முக்கியமான முகங்களில் ஒருவராக இருக்கிறார். ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பைகள், இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) போட்டிகளை பல்வேறு பருவங்களிலும் தொகுத்து வழங்கியுள்ளார். தனது பேச்சு, அழகு, ஸ்டைல் உள்ளிட்டவற்றால் மற்ற தொகுப்பாளர்களை விட அதிக புகழ் பெற்றவர் மயாந்தி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியும்கூட.
இதற்கிடையே, நேற்று ட்விட்டர் பயனர்களில் ஒருவர் இந்த ஆண்டு ஐபிஎல் லீக்கை மாயந்தி லாங்கர் தொகுத்து வழங்குவாரா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், "மாயந்தி லாங்கர் ட்ரீம் 11 ஐபிஎல் 2020 இன் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்" என்று ட்வீட் செய்தது.
இதனையடுத்து மாயந்தி வேலையை விட்டு நின்றுவிட்டார் என்பது போன்ற தங்களது யூகங்களை ரசிகர்கள் பதிவிட தொடங்கிய நிலையில், அவர்கள் அனைவருக்கும் ஒரு தித்திப்பு செய்தியை மயாந்தி தனது ட்விட்டர் வாயிலாக கொடுத்தார். `தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனாலேயே இந்தமுறை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளராக பங்கேற்க முடியவில்லை' என்பது மாயந்தி சொன்ன அந்த இனிப்பான செய்தி. கூடவே இந்த தகவலுடன், தனது கணவர் பின்னி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் மாயந்தி. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil