இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனையும், மிஷன் ஒலிம்பிக் செல் உறுப்பினருமான த்ருப்தி முர்குண்டே, முன்னாள் டாப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகோபாலன் மற்றும் முன்னாள் SAI நிர்வாக இயக்குனர் – அணிகள் – ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பான விவரங்கழள விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (ஜனவரி 23) வெளியிட்டார்.
இந்த குழு அடுத்த ஒரு மாதத்திற்கு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) அனைத்து விவகாரங்கழளையும் கண்கானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் ரவி தஹியா உள்ளிட்ட நாட்டின் சில முன்னணி மல்யுத்த வீரர்கள் மூன்று நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) இரவு தாக்குருடன் நடந்த மாரத்தான் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையின் போது சுமூகமான முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ்’ பெற்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் சம்மேளனத்தின் அன்றாட வேலைகளை மேற்பார்வைக் குழு கவனிக்கும் என்றும் தலைவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கும், ”என்று தாக்கூர் கூறியுள்ளார்.
மேலும் கண்காணிப்புக் குழு உலக சாம்பியனான மேரி கோம் தலைமையில் செயல்படும் என்றும், அடுத்த ஒரு மாதத்தில், இந்தக் குழு பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து தரப்பினருடனும் பேசி அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். அதுவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அனைத்து அன்றாட பணிகள் மற்றும் செயல்பாடுகள் இந்தக் குழுவால் கவனிக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் தவிர, IOA குழுவில் வில்லாளர் டோலா பானர்ஜி மற்றும் இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு (IWLF) தலைவர் மற்றும் IOA பொருளாளர் சஹ்தேவ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil