இந்தியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்று மும்பையில் அமைந்திருக்கும் வான்கடே. 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இங்கு தான் அரங்கேறியது. இந்தியா - இலங்கை அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் கேப்டன் எம்.எஸ் தோனி தனது ஸ்டைலில் சிக்ஸர் விளாசி இந்தியாவுக்கு கோப்பை வென்று கொடுத்தார். அவர் பறக்க விட்ட அந்த சிக்ஸர் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்து ஆணி போல் பதிந்து கிடக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MCA to name one stand of Wankhede after India captain Rohit Sharma
மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ) நிர்வகித்து வரும் அந்த மைதானத்தின் திவேச்சா பெவிலியன் லெவல் 3 பகுதிக்கு இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. அதன்படி, 'ரோகித் சர்மா' ஸ்டாண்ட் என்று பெயரிடப்பட உள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை மும்பையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86-வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இணைக்கப்பட்ட கிளப் அணிகளுக்கான நிதியை ரூ. 75 கோடியாக உயர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வரும் ஆண்டுகளில் இதை ரூ. 100 கோடியாக உயர்த்துவதற்கான எதிர்காலத் திட்டம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கிராண்ட் ஸ்டாண்ட் லெவல் 3 மற்றும் கிராண்ட் ஸ்டாண்ட் லெவல் 4 ஆகிய இரண்டு ஸ்டாண்டுகள் முறையே ஷரத் பவார் ஸ்டாண்ட் மற்றும் அஜித் வடேகர் ஸ்டாண்ட் என மறுபெயரிடப்பட உள்ளன என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் அமோல் காலேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வான்கடே மைதானத்தின் பெவிலியனில் உள்ள போட்டி நாள் அலுவலகம் இப்போது எம்.சி.ஏ அலுவலக லவுஞ்ச் என்று அழைக்கப்படும்.
“இன்றைய முடிவுகள் மும்பை கிரிக்கெட்டின் தூண்கள் மீதான எங்கள் ஆழ்ந்த மரியாதையையும், இன்னும் வலுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதியையும் பிரதிபலிக்கின்றன. இந்த ஸ்டாண்டுகளும் இந்த லவுஞ்சும் மும்பையின் கிரிக்கெட் உணர்வை கட்டியெழுப்பியவர்களின் பாரம்பரியத்தை என்றென்றும் எதிரொலிக்கும்” என்று எம்.சி.ஏ தலைவர் அஜிங்க்யா நாயக் கூறினார்.
முன்னதாக, வான்கடே மைதானத்தைச் சுற்றியுள்ள ஸ்டாண்டுகள் மற்றும் நடைபாதை பாலங்களுக்கு புகழ்பெற்ற நபர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை எம்.சி.ஏ உறுப்பினர்கள் பலர் முன்வைத்தனர்.
எம்.சி.ஏ அதன் முன்னாள் தலைவர்களான ஷரத் பவார், மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக், மறைந்த இந்திய கேப்டன் அஜித் வடேகர், மறைந்த ஏக்நாத் சோல்கர், மறைந்த திலீப் சர்தேசாய், மறைந்த பத்மகர் ஷிவால்கர், முன்னாள் இந்திய கேப்டன் டயானா எடுல்ஜி மற்றும் தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்களை வைக்குமாறு அதன் உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.