இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. களத்தில் பந்துகளால் மட்டுமே ஆக்ரோஷம் காட்டுபவர் ஷமி. அனாவசிய வார்த்தைப் போரில் ஈடுபடுவது, சண்டையிடுவது, ஸ்லெட்ஜிங் என்று எந்த பழக்கமும் இல்லாத அமைதிப் பையனாகவே இருந்து வந்தார். ஆனால், இப்போது அவரது மனைவி ஹசின் ஜகான், ஷமி மீது சுமத்தும் புகார்கள் அனைத்தும் நம்மை திடுக்கிட வைத்துள்ளன.
அதாவது, நேற்று ஹசின் ஜகான் தனது பேஸ்புக் பக்கத்தில், சில ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார். அதில், ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ளது போன்று உள்ளது. மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ளதாக தெரிகிறது. அதில் ஒருவர் கராச்சியை சேர்ந்த விபச்சாரி என்று ஹசின் தெரிவித்துள்ளார். இந்த பேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப்பட்டது.
இதையடுத்து டிவி சேனலுக்கு ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், ஷமியின் காருக்குள் அவரது செல்போன் இருந்ததாகவும், அதை எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்ததாக கூறியுள்ளார். மேலும் வெகுகாலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும் ஜகான் கூறியுள்ளார்.
மேலும், முகமது ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றதாகவும் ஹசின் ஜகான் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மகளுக்காக பொறுமை காத்து வந்ததாகவும், ஆனால் ஷமியின் ஆபாச உரையாடல்களை பார்த்த பிறகு பொறுமை காக்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டினை ஷமி மறுத்துள்ளார். இதுகுறித்து ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை. எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. எனது புகழை கெடுத்து, எனது கிரிக்கெட் வளர்ச்சியையும் தடுக்க சதி நடக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இவ்விகாரத்தை மேலும் பெரிதுப்படுத்துவது போன்று மேற்கு வங்க சிறுபான்மை ஐக்கிய பேரவை துணைத் தலைவர் மௌலானா அதிஃப் கத்ரி பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "கணவர் வேறு பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாத்தில் முழு அனுமதி உள்ளது. கணவனின் இந்த விஷயத்தில் மனைவி தலையிடவே கூடாது" என்று தெரிவித்துள்ளார்.