கர்நாடக மாநிலத்தில் ஜூலை முதல் வாரத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை காரணமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால், காவிரியில் மேட்டூர் அணைக்கு வருகிற நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணை 43-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணைக்கு ஜூலை 29-ம் தேதி மாலை 1 லட்சத்து 58 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், விரைவில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று சிறிது நீர் வரத்து குறைந்தது. இருப்பினும், தற்போது மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 119.02 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.56 டி.எம்.சி-யாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 23,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு, பின்னர் தற்போது 46,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. மேலும், படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 81,000 அன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையில் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து டிசம்பர் 13-ம் தேதி வரை 137 நாட்களுக்கு பாசனத்திற்கு நீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையின் வரலாற்றில் 13வது முறையாக கால்வாய் பாசனத்திற்கு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“