10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, MI vs DC LIVE Cricket Score
இந்நிலையில், இன்று நடைபெற்ற 63-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்பேரில், மும்பை அணியில் இருந்து ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில், ரோஹித் சர்மா 5 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களிலேயே முஸ்தபிசுர் ரஹ்மான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, வில் ஜாக்ஸ் களமிறங்கினார். இதனிடையே, 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி 25 ரன்கள் எடுத்த ரியான் ரிக்கல்டன் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். வில் ஜாக்ஸும் 13 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து 21 ரன்கள் சேர்த்த நிலையில், முகேஷ் குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை அணி விரைவாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில், சூரியகுமார் யாதவும், திலக் வர்மாவும் பொறுப்பாக விளையாடி அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினர். எனினும், திலக் வர்மாவின் விக்கெட்டையும் முகேஷ் குமார் வீழ்த்தினார். அதன்படி, 27 பந்துகளில் 27 ரன்களுடன் திலக் வர்மா பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட் இழப்பால் மும்பை அணி ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது.
திலக் வர்மாவிற்கு அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் மூன்று ரன்களில் அவுட்டானார். அவரது விக்கெட்டை துஷ்மந்த சமீரா கைப்பற்றினார். ஆனால், தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அரை சதம் விளாசினார்.
மேலும், நமன் திர்ரும் தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 180 ரன்கள் குவித்தது. 43 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர் விளாசிய சூர்யகுமார் யாதவ் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம், 8 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 24 ரன்கள் குவித்த நமன் திர்ரும் களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் இருந்து முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. அந்த அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் முறையே 11 மற்றும் 6 ரன்களில் டிரென்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய அபிஷேக் போரலும் 6 ரன்களில் தனது விக்கெட்டை வில் ஜால்ஸிடம் இழந்தார். இதனால், டெல்லி அணியினர் ரன்களை எடுக்க முடியாமல் திணறினர். அடுத்தபடியாக, களமிறங்கிய சமீர் ரிஸ்வி மட்டும் 35 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 39 ரன்கள் குவித்ததார். எனினும், இவரது விக்கெட்டை மிட்செல் சான்ட்னர் கைப்பற்றினார். இதன் பின்னர், டெல்லி வீரர்களால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
மேலும், விப்ராஜ் நிகம் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோரது விக்கெட்டையும் வீழ்த்தி சான்ட்னர் அசத்தினார். இது தவிர டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (2 ரன்கள்), மாதவ் திவாரி (3 ரன்கள்) மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் (0 ரன்கள்) ஆகியோரது விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். இதனால் டெல்லி வீரர்களால் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியவில்லை.
முடிவாக, 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி இழந்தது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் இருந்து சிறப்பாக பந்து வீசிய சான்ட்னர் மற்றும் பும்ரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், வில் ஜாக்ஸ் மற்றும் கர்ன் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
டாஸ் வென்ற டெல்லி பவுலிங் - மும்பை பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், மும்பை முதலில் பேட்டிங் ஆடுகிறது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
டெல்லி கேப்பிடல்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், துஷ்மந்த சமீரா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்
மும்பை இந்தியன்ஸ்: ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா